தமிழக முதல்வர் தன்னை தானே புகழ்வது எதிர்ப்பை உண்டாக்கும் எனவும் கருணாநிதி கூட அடுத்தவரை புகழ செய்து கேட்பாரே தவிர தன்னை தானே புகழ்ந்தது கிடையாது என பிரபல துக்ளக் பத்திரிகையை சேர்ந்த சத்யநாராயணன் குறிப்பிட்டுள்ளார், இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மேடைப்பேச்சுகளை எழுதித் தரும் ஆசாமி யாரென்று தெரியவில்லை.பத்து நிமிடம் பேசினால் ஐம்பது முறையாவது ' திராவிட மாடல் ஆட்சி ' என்று சொல்லத் தவறுவதில்லை முதல்வர்.
திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது என்பதையும் மேடை தவறாமல் கூறுகிறார். சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னால் யாருக்குத்தான் எரிச்சல் வராது? திராவிட மாடல் என்பது எம்.ஜி.ஆரின் அண்ணாயிஸம் போன்ற ஏதோ ஒன்று என்று தெரிகிறது. இருக்கட்டும்.
ஒரு கொள்கையை முன் நிறுத்தி அதன்படி ஆட்சி செய்வது நல்லதுதான். அந்த கொள்கை எந்த அளவுக்கு எடுபடுகிறதோ அந்த அளவுக்கு ஆட்சிக்கு பெயர் கிடைக்கும்.ஆனால் இவர், தான் செய்வதற்கெல்லாம் திராவிட மாடல் என்று பெயர் சூட்டுவது வினோதமாக இருக்கிறது.கடிகாரத்துக்கு முன்னால் ஓடுகிறேன். காலண்டர் தேதி கிழிப்பதற்கு முன் கிழித்து விடுகிறேன்.
இந்தியாவுக்கே வழி காட்டும் ஆட்சியை நடத்துகிறேன். என் பெயரே உழைப்புதான். என்னை முதல்வரின் முதல்வர் என்கிறார்கள்- என்கிற ரீதியில் தன்னைத்தானே மெச்சிக் கொள்வதெல்லாம் தேவையா? முதல்வருக்கு உரை எழுதிக் கொடுப்பவர் , தாறுமாறாக எழுதிக் கொடுத்தாலும், அவற்றைத் தவிர்த்து விட்டு பொருத்தமானவற்றை மட்டும் பேச முதல்வர் முயற்சிக்க வேண்டும். அல்லது அந்த பேச்சை எடிட் செய்யவாவது ஒருவரை வைத்திருக்க வேண்டும்.
அதுதான் சரியான மாடலாக இருக்கும். கருணாநிதி அவர்கள் கூட பாராட்டு விழாக்களில் அமர்ந்து ரசிப்பாரே தவிர, தானே பாராட்டிக்கொள்ள மாட்டார்.ஆக்க பூர்வமான சிந்தனைகளும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுமே மக்களைக் கவரக்கூடிய மாடல்.
குடும்பத்துடன் துபாய் சென்று ஷாப்பிங் மால் கொண்டு வந்தது, அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழி கற்பதற்கு தடை போடுவது, அற நிலையத்துறையை நடத்தும் விதம்-இவையெல்லாம் திமுகவின் ஓராண்டு ஆட்சியை பல முறை பார்த்து
விட்ட திமுக மாடல் ஆட்சியாகத்தான் காட்டுகிறதே தவிர, முதல்வர் நினைப்பது போன்ற உன்னதமான திராவிட மாடல் ஆட்சியாகக் காட்டவில்லை.இரண்டாம் ஆண்டு ஆட்சி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.