ஹைதராபாத் : இந்தியாவில் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஒஸ்மானியா பல்கலைக்கழகம் ராகுலின் வருகைக்கு மறுப்புத்தெரிவித்திருப்பது தெலுங்கானா அரசியலில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
1918ல் தொடங்கப்பட்ட பழமையான ஒஸ்மானியா பல்கலைக்கழகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுடன் உரையாற்ற மே 7 அன்று காங்கிரஸ் கட்சித்தலைவரான ராகுல் வருவதாய் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் ராகுலின் வருகைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது.
இதுகுறித்த எழுத்துப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படாவிட்டாலும் ஒஸ்மானியா பல்கலைக்கழக நிர்வாக குழுவின் அறிக்கை பூகம்பத்தை கிளப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவு மாணவர்கள் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் ராகுல் வருகையை அனுமதிக்கக்கோரி மனு ஒன்றை அளித்துள்ளனர். ஏப்ரல் 23 அன்று நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட இந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா காங்கிரசார் இதுகுறித்துக்கூறுகையில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி மாநில அரசு தலைவர் ராகுலின் வருகையால் பயந்துபோயுள்ளது. அதனால் இதுபோன்ற குறுக்கு யுக்தியில் செயல்படுகிறது என விமர்சித்துவருகின்றனர். ஆனால் ஜூன் 2017 நீதிமன்ற உத்தரவுப்படி எந்த ஒரு அரசியல் கூட்டமோ அல்லது நிகழ்வோ பல்கலைக்கழத்தில் நடைபெற அனுமதிக்கப்பட மாட்டாது என டிஆர்எஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
அரசியல் நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்த தீர்மானமும் 2107ல் நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் காங்கிரஸ் ஆதரவு மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஏபிவிபி மற்றும் டிஆர்.எஸ் ஆதரவு மாணவர்கள் ராகுலின் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்துவதால் ஹைதராபாத்தில் பரபரப்பு நிலவிவருகிறது.