புதுதில்லி : ஷாஹின்பாக் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கடைகள் மற்றும் வீடுகளை டெல்லி நிர்வாகம் அகற்றிவருகிறது. இந்த ஷாஹின் பாக் பகுதியில் தான் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் கலவரம் ஏற்படுத்தப்பட்டு 57 பேர் வரை கொல்லப்பட்டனர். அதில் போலீசாரும் அடக்கம். மேலும் கடந்த வாரம் ஒரு பிரிவு மக்களால் ஹனுமான் ஜெயந்தி பேரணி செல்லும்போது ஷாகின் பாக் வன்முறையாளர்கள் கல்லெறிந்து வன்முறையை தூண்டியிருந்தனர்.
அதையடுத்து சில நாட்களில் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் ஷாகின்பாக் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற தொடங்கியது. இது சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்றும் அவர்கள் வாழ்வாதாரத்தை முடக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் பிருந்தா காரத் உள்ளிட்ட இடதுசாரிகளும் பல லிபரல்சுகளும் குரல்கொடுத்தனர்.
நாடெங்கும் இது பெரிய விஷயமாக இடதுசாரிகளால் பரப்பப்பட்டது. இருப்பினும் மாநகராட்சி நிர்வாகம் தனது பணியை தொடர்ந்தது. அதையடுத்து நீதிமன்றத்தில் தற்காலிக தடை வாங்கப்பட்டு அகற்றும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. தற்காலிக தடை முடிந்தபின்னர் நேற்று மீண்டும் அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. இதை எதிர்த்து சிபிஐஎம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு " சிபிஐஎம் ஏன் மனுதாக்கல் செய்கிறது. இதில் மீறப்பட்ட அடிப்படை உரிமை என்ன. அரசியல் கட்சிகளின் விருப்பப்படி நடக்கும் இடம் இதுவல்ல.நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்தால் அவை கண்டிப்பாக அகற்றப்படும்.
எங்களது வீடு அங்கீகரிக்கப்படாததாகி இருந்தாலும் அதை இடிக்கமுடியாது என இங்கு யாரும் வாதாட முடியாது.நீங்கள் ஆணையை தடுக்க முடியாது. அரசியல் கட்சிகள் விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது. இந்த வழக்கை இங்கு விசாரிக்க முகாந்திரம் இல்லை. நீங்கள் உயர்நீதிமன்றத்தை நாடுங்கள்" என நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதைத்தொடர்ந்து சிபிஐஎம் தனது வழக்கை வாபஸ் வாங்கியது.