24 special

வாய்ச்சவடால் திராவிடம்! Equality and Equity - தாறுமாறா போட்டுடைத்த கிருஷ்ணசாமி..!

krishnasamy
krishnasamy

புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்து தனது நிலைப்பாட்டை விளக்கும்  வண்ணமாகவும், ஆளும் கட்சியின் போக்கை கூர்ந்து கவனித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து  வருகிறார். அந்த வகையில் தற்போது  திராவிட மாடல் குறித்து கடந்த 10 மாதங்களாக உரத்த குரலில் தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. சமத்துவம்; சம நீதி என்பது தமிழகத்திற்கு மட்டும் சொந்தமான சொற்றொடர் அல்ல. உலகெங்கும் வாழும் கோடான கோடி மக்களால் பின்பற்றி வரக்கூடிய கொள்கையே அது. பெரும்பாலான மேலை நாடுகளில் Equality and Equity என்பதை நடைமுறை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி வாழ்கிறார்கள் என மேற்கோள் காட்டி தனது அதிரடி கருத்தை முன் வைத்துள்ளார்.


அதில், வாய்ச்சவடால் திராவிடம்! சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் வழிகாட்டும் வடக்கு!! வழிமொழிவோம் வருங்காலத்தில் தெற்கிலும்!திமுக முதல் முறையாக ஆட்சி அமைத்த 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை  மற்றும் 1971 - 1976 , 1981-1991, 1996-2001, 2006-2011 வரையிலும் திமுகவின் முன்னணி தளகர்த்தர்கள் ஆட்சியிலிருந்த போது, பேசாத சமூக நீதி மற்றும் திராவிட மாடல் குறித்து கடந்த 10 மாதங்களாக உரத்த குரலில் தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது.  பொருளாதாரத் தளத்தில் ஏற்கனவே, கடந்த காலங்களிலிருந்த அரசுகள் அறிவித்த திட்டங்களையே, பெயரை மாற்றி, இப்பொழுது புதிய திட்டங்களைப் போல அறிவிக்கிறார்கள். இவர்கள் பெரிதுபடுத்திப் பேசுகின்ற சமூக நீதி அல்லது திராவிட மாடல் ஆட்சிக்கான எவ்விதமான அடையாளங்களையும் எள்ளளவும் கள அளவில் எவராலும் காண இயலவில்லை.

சமத்துவம்; சம நீதி என்பது தமிழகத்திற்கு மட்டும் சொந்தமான சொற்றொடர் அல்ல. உலகெங்கும் வாழும் கோடான கோடி மக்களால் பின்பற்றி வரக்கூடிய கொள்கையே அது. பெரும்பாலான மேலை நாடுகளில் Equality and Equity என்பதை நடைமுறை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி வாழ்கிறார்கள். வளர்ந்த அல்லது வளர்ந்து வரக்கூடிய எல்லா நாடுகளிலும் இந்த இரண்டு சொற்றொடரும் ஒவ்வொரு இல்லத்திலும் household இரண்டற கலந்த சொற்றொடர் ஆகும். மேலை நாடுகளின் ஒவ்வொரு பிரஜைக்கும் அந்தச் சொல்லுக்கான அர்த்தம் தெரியும். தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் ஒரு பிரஜையினுடைய சம உரிமைக்கும் சம பங்கிற்கும் ஏதாவது பங்கம் வருமேயானால் அவர்கள் தனி மனிதர்களாகவும் குரல் கொடுக்க தயங்கியதே இல்லை. அங்கு சமூக நீதி உயிரோட்டமாக இருக்கிறது.

ஆனால், நமது தேசத்தில் சமூக நீதி என்பது ஒரே ஒரு அரசியல் கட்சியின் அரசியல் வெற்றுக் கோசமாக மட்டுமே உள்ளது. இவர்கள் பேசக்கூடிய சமூக நீதியோ திராவிட மாடல் ஆட்சியோ தமிழகத்தில் இருக்கக்கூடிய 99.9% மக்களுக்கு என்னவென்றே தெரியாது; புரியாது. ஏனெனில், இம்மண்ணின் மக்கள் தினம் தினம் அரசியல் - பொருளாதார - சமூக ரீதியாக சக மனிதர்களால் வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறார்கள். சுதந்திரமும் சமத்துவமும் சம உரிமையும் சுகவாழ்வும் மதிப்பும் மரியாதையும் உயர்வும் ஏற்றமும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று எண்ணக்கூடியவர்கள் இம்மண்ணில் ஏராளம்.



சமம், சமத்துவம் என்ற சொல்லாடல்  இந்த மண்ணில் எட்டிக்காய் விட அதிக கசப்பானது. ஆனால், உலகத்தை ஏமாற்றச் சமூகநீதி பற்றியும் திராவிட மாடல் பற்றியும் ஓங்கி உரத்த குரலில் இந்த தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்படுகிறது. அவர்கள் பேசுகிற சமூகநீதி இந்த மண்ணிலேயே குண்டு ஊசி முனை அளவு கூட நடைமுறையில் இல்லை என்பது உண்மையாக இருந்தாலும் கூட, சமூகநீதிக்கான முன்னோடி மாநிலம் என்று பல்லவி பாடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அரசாங்க துறைகளில் அடிமட்ட பணிகளில் மட்டுமே ஒரு சில வாய்ப்புகளைக் கொடுத்துவிட்டு, ஒரே ஒரு குடும்பம் மட்டுமே தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக தமிழகத்தினுடைய தலைமை ஆட்சிப் பொறுப்பிலே இருந்துகொள்ள ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கான பெரும் முயற்சியின் விளைவே இது.

தேர்தல் நேரத்தில் பத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, வெற்றி பெறுவது; வெற்றி பெற்றவுடன் கூட்டணி ஆட்சி அல்ல, இது தனிக்கட்சி ஆட்சி என சொல்லி விடுவது. இது இப்போது மட்டுமல்ல 1967-இல் முதல்முறையாக ஏழு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சரவையில் யாரையும் சேர்க்காமல் ஒரு கட்சி  ஆட்சிக்கு மட்டுமே வழி வகுத்தார்கள். அதன்பின் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவர்களும் அதே கோட்பாட்டையே கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தங்களுடைய சமூக நீதி கொள்கையை வேகமாக பரப்பக் கூடியவர்கள் அதற்குள் என்ன சமூகநீதி இருக்கிறது என்பதை இதுவரை சொல்லவில்லை. அது வெறும் காற்றடைத்த பலூன்போல காற்றில் பறக்கிறதே தவிர, அதற்குள் வேறு ஒன்றுமே இல்லை. இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் உண்டு. அந்த மாநிலங்களில் எல்லாம் தமிழ்நாட்டைப் போல மாதிரி ஆட்சி பேசுவதில்லை; பெரியோர் சிறியோர் ஆட்சி பேசுவதில்லை; கருப்பு வெள்ளை ஆட்சி பேசுவதில்லை. ஆனால், அவர்கள் எவ்விதமான வாய்ச்சவடாலும் இல்லாமல் எதார்த்தமான சம நீதி ஆட்சி அமைக்கிறார்கள்;

ஆட்சியில் பங்கு கொடுக்கிறார்கள். இந்த மாதம் 5 மாநில தேர்தல் நடைபெற்ற பஞ்சாப், உத்திர பிரதேஷ், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் முதல் அமைச்சர்கள் பதவியேற்று விட்டார்கள். அதில் நான்கு மாநிலங்களில் பிஜேபியும், ஒரு மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சி அமைத்திருக்கின்றன. எல்லா மாநிலங்களிலும் துணை முதலமைச்சர் பதவிகளைக் கொடுத்து அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து அளித்து இருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் 2 துணை முதலமைச்சர்கள் பதவிகளைக் கொடுத்திருக்கிறார்கள்., மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களிலும், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறது. ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் துணை முதலமைச்சர் பதவி உண்டு.

மேலே குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட மாநிலங்களில் பிற கட்சிகளோடு கூட்டணி அமைத்து இருந்தால் அவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தை பொருத்தமட்டில் அரசு அதிகாரம் என்று வருகின்ற போது, அது ஒரு கட்சிக்கும், குடும்பத்திற்கும் மட்டுமே நிரந்தர சொத்தாக, அது கோபாலபுரத்தை மட்டுமே மையம் கொண்டு இருக்க வேண்டும் என்ற ஒரு திராவிட மாடம் ஆட்சி - திராவிட மனுவை தமிழகத்தில் திணிக்கிறார்கள்.

வர்ணாசிரமத்தை, ஆரியத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு திராவிட வர்ணாசிரமத்தை நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள். எனவே, சமூக நீதி என்பது அரசாங்க வேலை வாய்ப்புகளில் கீழ்மட்டத்தில் வேலை செய்யக்கூடிய தூய்மைப் பணியாளர்கள், காவலர் பணி, எழுத்தர் பணிகளில் இட ஒதுக்கீடு கொடுப்பது அல்ல.

அரசியல் அதிகாரத்தில் பகிர்ந்தளிக்கப்படுவது தான் உண்மையான Equality and Equity. திராவிடமும் திராவிட மாடலும் சமூகநீதியும் போலியானவைகள். அதை எத்தனையோ முறைகள் நாம் சொல்லி இருக்கிறோம். உண்மையான சமூக நீதியையும் சமத்துவத்தையும் முதலில் அரசியல் அதிகாரத்தில் அளிக்கப்பட வேண்டும். அது ஒரு குடும்பத்தின் சொத்தாக நிரந்தரமாக இருந்து விடக்கூடாது.

இனி வரக்கூடிய காலகட்டங்களில் தேர்தலுக்கு முன்பு மட்டுமல்ல, கூட்டணி ஆட்சியும் வரவேண்டும். தமிழகத்தில் சமத்துவம் சமநீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் அதற்கு முன்னோடியாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்திட நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். யோகி அவர்கள் சமூகநீதி பேசவில்லை; மாடல் ஆட்சி பற்றி பேசவில்லை.

ஆனால்,  ஆட்சி அதிகாரத்தில் வெவ்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவிகளைக் கொடுத்து உண்மையான சமத்துவத்திற்கு வித்திட்டு இருக்கிறார். அதேபோன்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேல்மட்டத்தில் கொடுக்கக்கூடிய பங்குகள் தான் கீழ்மட்டம் வரையிலும் சரியாக அது பிரிந்து போகும்; பகிர்ந்தளிக்கப்படும்.

எனவே, நாங்கள் இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்று சட்டரீதியாக கொடுக்கப்பட வேண்டிய அரசு பணியிடங்களை கிள்ளிக் கொடுத்தால் போதாது; தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் அதிகாரத்திலும் பங்கு வேண்டும். அது அள்ளிக் கொடுக்கப்பட வேண்டும். வெறும் பேச்சளவில் சமூகநீதி பேசக்கூடிய போலி திராவிட வாதிகளால் உண்மையான சமத்துவத்திற்கான ஆட்சி அதிகாரங்கள் வராது. அனைத்து சமுதாயத்தினருக்கும் அரசியல் அதிகாரத்தில் சமபங்கு கிடைக்க வேண்டுமெனில், எதிர்வரும் காலத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும்.

அதற்கு தமிழக மக்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். உண்மையான சமூகநீதி என்ன என்பதற்கு உத்தரப் பிரதேசம் துருவ நட்சத்திரத்தைப் போல எடுத்துக்காட்டாக இருப்பதை ஒவ்வொரு தமிழரும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இம்மண்ணில் சமநீதி – சமபங்கு – சமத்துவ ஆட்சி Equality and Equity அமைத்திட முதல்படியாக அனைத்து தரப்பினரும் சமபங்கு பெற 2026-ல் கூட்டணி ஆட்சி அமைக்க நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வாய்ச்சவடால் திராவிடம்! சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் வழிகாட்டும் வடக்கு!! வழிமொழிவோம் வருங்காலத்தில் தெற்கிலும்! -  டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA நிறுவனர் & தலைவர் புதிய தமிழகம் கட்சி 26.03.2022 இவ்வாறு புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி பதிவிட்டு உள்ளார்.