
சர்வதேச பயங்கரவாதக் குறியீடு 2026 (Global Terrorism Index) வெளியாகி இருக்கும் நிலையில், பாகிஸ்தான் உலக அரங்கில் ஒரு "வரலாற்றுச் சாதனையை" நிகழ்த்தியிருக்கிறது—ஆம், பயங்கரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதன்முறையாக முதலிடம் பிடித்துத் தனது கோர முகத்தை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறது. நீண்டகாலமாக அண்டை நாடான இந்தியாவைச் சிதைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு பயங்கரவாத அமைப்புகளைத் தன் மண்ணில் வளர்த்து, அவர்களுக்குப் பயிற்சியும் புகலிடமும் அளித்து வந்த பாகிஸ்தான், இன்று தான் நட்ட விஷமரம் தன் மீதே விழுவதைத் தடுக்க முடியாமல் தவிக்கிறது. "வளர்த்த கடா மார்பில் பாயும்" கதையாக, ஒரு காலத்தில் இந்தியாவுக்கு எதிராக ஏவி விடப்பட்ட அதே தீவிரவாதக் குழுக்கள், இன்று பாகிஸ்தானின் ராணுவத்தையும் அப்பாவி மக்களையும் வேட்டையாடி வருகின்றன. 2025-ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 1,045 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அதில் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அந்த நாடு எத்தகைய பாதாளத்தை நோக்கிச் செல்கிறது என்பதற்கான சாட்சி. குறிப்பாகக் கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்கள் பயங்கரவாதத்தின் மையப்புள்ளிகளாக மாறிவிட்டன.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்திய மண்ணில் இருந்து கொண்டே பாகிஸ்தானின் செயல்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் நியாயப்படுத்தும் சில 'முகமூடி' மனிதர்களின் நிலைதான். உலகமே பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத உற்பத்தி சாலையாகப் பார்க்கும்போது, இங்கிருக்கும் ஒரு சிறு கூட்டம் மட்டும் அந்த நாட்டை அமைதிப் பூங்காவாகவும், பாதிக்கப்பட்ட தேசமாகவும் சித்திரிக்க முயல்கிறது. சர்வதேச குறியீடுகள் பாகிஸ்தானின் நிலையைத் தோல்வியுற்ற நாடாகப் படம் பிடித்துக் காட்டும்போது, இங்கிருந்து கொண்டு அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களின் முகத்திரை இப்போது கிழிந்து தொங்குகிறது.
பொருளாதாரத்தில் அதல பாதாளத்திற்குச் சென்றாலும், பயங்கரவாத வளர்ச்சியில் மட்டும் 6% உயர்வுடன் முதலிடத்தைத் தக்கவைக்கப் போராடும் ஒரு நாட்டை ஆதரிப்பது என்பது, மறைமுகமாக பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்குச் சமம். அண்டை நாடுகளை அழிக்க நினைத்தவர்கள், இன்று தங்கள் நாட்டிலேயே அமைதி இழந்து, உலகளாவிய பயங்கரவாதப் பட்டியலில் முதலிடம் பிடித்து நிற்பது காலத்தின் கட்டாயம் மற்றும் அவர்கள் செய்த வினையின் அறுவடை. பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்று மேடையில் முழங்குபவர்கள், பாகிஸ்தான் இன்று சந்திக்கும் இந்த நிலையைப் பார்த்தாவது உண்மையை உணர வேண்டும்; இல்லையேல் வரலாறு அவர்களைப் பயங்கரவாதத்தின் கூட்டாளிகளாகவே பதிவு செய்யும்.
