24 special

பெரியோர்களே... தாய்மார்களே... பிரச்சாரத்தில் ரோபோக்களை களமிறக்கிய பாஜக!


தேர்தல் பிரச்சார களத்தில் வாக்காளர்களை கவர்வதற்கு புதுப்புது டெக்னிக்குகளை கையாள்வதில் பாஜகவினர் எப்போதுமே தனி இடத்தில் உள்ளனர். 


தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்கள் அதிகம் செலவு செய்யக்கூடாது என்ற தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே அனைத்து கட்சி வாக்காளர்கள் கவனமும் சோசியல் மீடியா பக்கம் திரும்பியது. ஆனால் அதற்கு முன்பிருந்தே சோசியல் மீடியாவில் பிரச்சாரம் செய்வதில் பாஜக கெத்து காட்டி வருகிறது. 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட தோசை சுடுவது, வடை போடுவது,  ராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு வாக்குசேகரிப்பது என பாஜகவினர் விதவிதமாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இப்படி வித்தியாசமான பிரச்சாரத்தை கையில் எடுக்கும் பாஜகவினர் தற்போது ரோபோக்களை களமிறக்கியுள்ளனர். 

ஆம், குஜராத் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய பா.ஜ.க.வின் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் ஹர்ஷத் பட்டேல் ரோபோக்களை களமிறக்கி உள்ளார். குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. 

இதனால் குஜராத் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீயாய் தீவிரமடைந்து வருகிறது. வாக்காள பெருமக்களை கவர வேட்பாளர்கள் விதவிதமான நுட்பங்களை கையாண்டு வருகின்றனர். எல்லா வேட்பாளர்களையும் பின்னுக்குத் தள்ளும் படியாக பாஜகவினர் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளனர். 

பிரச்சாரத்திற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை துண்டு பிரச்சுரம் விநியோகிப்பது, ஸ்பீக்கர்கள் மூலமாக “தாய்மார்களே... பெரியோர்களே... பாஜகவிற்கு வாக்களியுங்கள்” என கோஷம் எழுப்புவது என பலவிதமான வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த புதுவிதமான பிரச்சாரம் வாக்காள பெருமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.