டெல்லி : நேஷனல் ஹெரால்டு நாளிதழ் பணமோசடி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதில் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறி சோனியா தரப்பு அமலாக்கத்துறை தலைமையலுவலகத்தில் ஆஜராகவில்லை.
அதேபோல வெளிநாட்டு பயணங்களில் இருப்பதால் தன்னால் வரமுடியவில்லை என கூறியிருந்த ராகுல்காந்தி இன்று டெல்லி அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜரானார். இதனால் டெல்லி காங்கிரசார் நேற்று போராட்டத்தில் குதித்தனர். முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் என போராட்டம் கடுமையாக நடைபெற்றது.
இதனால் பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசாருக்கும் காங்கிரஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா " மோடி அரசு காட்டுமிராண்டித்தனத்தை எல்லையை கடந்துள்ளது. முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தாக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் போலீசாரால் தாக்கப்பட்டதுடன் அவரது கண்ணாடி தரையில் வீசப்பட்டுள்ளது. அவரது இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் எம்பி.பிரமோத் திவாரி சாலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டபோது தாக்கப்பட்டுள்ளார். தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தான் ஜனநாயகமா" என சுர்ஜிவாலா கூறியதுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரம் போலீசாரின் அறிவுரையை ஏற்கமறுத்து தரையில் உருண்டதாகவும் அவரை கீழே இருந்து தூக்க முயன்றபோது எழுந்திருக்காமல் அடம்பிடித்ததாகவும் அப்போது போலீசார் கைபிடித்து தூக்குகையில் அவரது கண்ணாடியை அவரே தவறவிட்டதாகவும் போலீசார் தரப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
நேற்று நடைபெற்ற விசாரணையில் ராகுல்காந்தியிடம் யங் இந்தியன் அண்ட் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் பங்குதாரர்களின் பரிவர்த்தனைகள் மற்றும் அவர்களின் பங்குகள் குறித்தும் விளம்பரதாரர்களின் பங்குகள் குறித்தும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரசின் மூத்த நிர்வாகிகளிடம் கேள்வியெழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.