24 special

மாரிதாஸ் விவகாரத்தில் "பிரபல எழுத்தாளர்" பரபரப்பு கருத்து...!

Maridhas and annamalai
Maridhas and annamalai

மாரிதாஸ் பாஜகவில் ஏன் இணையவில்லை என்ற கேள்வியும் மாரிதாஸ் பாஜகவில் இணையும் சூழல் இன்னும் அமையவில்லையா என்ற கேள்வியும் எழுந்துவரும் சூழலில் பிரபல சமூக எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :


மாரிதாஸ் ஏன் கட்சியில் சேரவில்லை அல்லது சேர்க்கபடவில்லை என்பது பற்றி நமக்கு தெரியாது ஆனால் ஒரு விஷயத்தை நம்புகின்றோம், மாரிதாஸ் கட்சியில் பதவி கிடைக்கும் என நம்பி தன் பணியினை தொடங்கவில்லை, இப்படி செய்தால் பெரும் பதவி தன்னை தேடிவரும் என அவர் கருதியிருக்கவுமில்லை.

இப்பொழுது அவர் பிரபலமாகியிருக்கலாமே தவிர தொடக்கம் அப்படி நோக்கமானது அல்ல‌, இன்று பிரபலமாகிவிட்ட பின் கட்சியில் பதவி வேண்டும் என அடம்பிடித்தால் அவரின் இதுகால சேவை கேள்விகுறியாகும் என்பதில் சந்தேகமே இல்லை, அதே நேரம் கட்சியில் சேர்ந்தாலும் இல்லாவிட்டாலும் சேவை செய்வேன் என்றால் அவரின் புகழ் கூடுமே தவிர குறையாது.

அவர் கட்சியில் சேர்ந்தால் என்ன செய்யபோகின்றாரோ அதைத்தான் அப்பொழுதும் இப்பொழுதும் செய்துகொண்டிருக்கின்றார், அங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைத்தான் செய்வார், அவருக்கு சிக்கல் வந்தபொழுதும் பாஜக முழு பலத்தோடு நின்று அவரை ஒரேமாதத்தில் சிறைமீட்ட பாதுகாவலெல்லாம் நடந்தது.

ஆக அவர் கட்சிக்கு வந்துதான் பணியாற்ற வேண்டும் என்பது அல்ல, நாட்டுபற்றும் தேசாபிமானமும் இருந்தால் எங்கிருந்தும் பணியாற்றலாம் கட்சியும் நாடும் அவருக்கு உரிய பாதுகாப்பை கொடுக்கும், மாறாக கட்சிக்குள் வருவேன் என அடம்பிடித்தால் அது அவரின் தோற்றத்துக்கு பின்னடைவு அன்றி வேறல்ல‌.

நாட்டுபற்று என்பதும் தேசத்திற்கான உழைப்பும் தானாக வரவேண்டும் எதையும் எதிர்பார்த்து வரகூடாது வந்தால் நிலைக்காது, இன்று பாஜகவில் பதவி என எதிர்பார்த்து உழைத்தால் நாளை இன்னொரு கட்சிக்கு அதே மனநிலையுடன் ஒருவன் தாவமாட்டான் என்பது நிச்சயமல்ல‌வரலாற்றில் பாரதியார் முதல் சோ ராம்சாமி வரை எத்தனையோ தேசாபிமானிகள் பலன் கருதாமல் கட்சியில் இடம் கருதாமல்தான் உழைத்தார்கள்.

பாரதியார் காங்கிரஸில் இடம் கேட்டு சண்டையிட்டவரும் அல்ல, சோ பாஜகவில் இடம் கேட்டு அடம்பிடித்தவரும் அல்ல‌, மாரிதாஸ் தன் சேவையினை தொடர்ந்தால் இந்த வரிசையில் இடம்பெறலாம், மாறாக பலன் கருதினால் அவர் திராவிடத்தின் முகங்களில் ஒன்றாகத்தான் அடையாளம் காணப்படுவார்.

நிச்சயம் அவரின் யூ டியூப் சேணலில் ஒரு பாதுகாப்பான வருமானம் வரலாம், அவரின் வங்கி கணக்கு முடக்கபட்ட நிலையிலும் இதர வகையில் அவருக்கு மக்கள் பாதுகாப்பு வழங்குகின்றார்கள், இதெல்லாம் அவர் பாஜகவில் சேர்ந்து தலைவர் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல, அவர்பால் கொண்ட அபிமானத்தால் இன்னும் அவர் உற்சாகமாக பணியாற்ற வேண்டும் என்பதற்காக.

கட்சி என்பது ஆயிரம் சிக்கலும் பிரச்சினையும் நிறைந்தது, யாருக்கும் தனிபட்ட முறையில் விலக்கு அளிக்கமுடியாத சங்கிலி கொண்டது, அது கட்சியின் நிலைதன்மையினை குலைத்துவிடும், சிலர் சொல்வது போல மாரிதாஸ் இல்லாவிட்டால் பாஜக இல்லை என்பதெல்லாம் அபத்தம், அக்கட்சியின் இந்நாள் தலைவர் முன்பு எங்கிருந்தார் என்பதும் அடுத்த தலைவர் எங்கிருக்கின்றார் என்பதும் யாருக்கும் தெரியாது.

மாரிதாசுக்கு  இன்னும் காலம் இருக்கின்றது, வயது இருக்கின்றது அதனால் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது, அதற்கு முன்னதாக அவர் கட்சியில் ஏன் சேரவில்லை அல்லது தன் நிலைப்பாடு என்ன என்பதை விளக்குவது அதைவிட நல்லது, ஆனானபட்ட அத்வாணியே இப்பொழுது சாதாரண தொண்டனாகத்தான் இருக்கின்றார், அக்கட்சியின் நிலைப்பாடு அது.

அந்த நிலைப்பாட்டின் படி நாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் தொண்டாற்றும் ஒவ்வொருவனும் பாஜகவின் அறிவிக்கபடா உறுப்பினர் என்பதில் சந்தேகமில்லை, அதை பதவி கொடுத்துத்தான் அங்கீகரிக்கும் அவசியம் அக்கட்சிக்கும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.