
பிரதமர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்புத் துறையில் மற்றுமொரு பிரம்மாண்ட மைல்கல்லாக, இந்திய விமானப்படையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் ரூ. 3.25 லட்சம் கோடி மதிப்பிலான 114 ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்க இந்தியா அதிரடி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மெகா டீம் மூலம், இந்திய வான் எல்லையில் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கப்போகிறது ரஃபேல். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் அடுத்த சில வாரங்களில் பிரான்சுக்கு அனுப்பப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஆகச்சிறந்த அம்சமே பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு கிடைத்துள்ள அசுர பலம் தான். மொத்தமுள்ள 114 போர் விமானங்களில், 90 விமானங்கள் பிரான்சின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் மற்றும் இந்திய நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. மீதமுள்ள விமானங்கள் பறக்கும் நிலையில் பிரான்சிடமிருந்து நேரடியாக வாங்கப்படும். இதன் மூலம் இந்திய விமானப்படையில் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 150-ஐ எட்டும். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இதற்கு ஏற்கனவே பூர்வாங்க ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த புதிய ரஃபேல் விமானங்களில் 50% உள்நாட்டு பாகங்களைப் பயன்படுத்துவதோடு, இந்தியாவின் முதன்மை ஏவுகணையான 'அஸ்த்ரா' மற்றும் 'பிரம்மோஸ்-என்ஜி' போன்ற உள்நாட்டு ஆயுத அமைப்புகளை இதில் இணைப்பதற்கான 'இடைமுகக் கட்டுப்பாட்டு ஆவணங்களை'பெறவும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் ரஃபேல் விமானங்கள் இந்திய ஆயுதங்களுடன் களம் காணும் அசுர பலத்தைப் பெறும்.
பாகிஸ்தான் எல்லைகளில் எழுந்துள்ள பாதுகாப்பு சவால்களை தவிடுபொடியாாக்க இந்த கூடுதல் ரஃபேல் விமானங்கள் விமானப்படைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.ஏற்கனவே இந்திய விமானப்படை 36 ரஃபேல் விமானங்களை வெற்றிகரமாக இயக்கி வரும் வேளையில், இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல்-எம் விமானங்களை வாங்கும் செயல்முறையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரவிருக்கும் 114 விமானங்கள் மற்றும் கடற்படையின் 26 விமானங்களையும் சேர்த்தால் இந்தியாவில் உள்ள ரஃபேல் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 176 ஆக உயர்ந்து, உலக அரங்கில் இந்தியாவின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத் துறை பெரும் தொய்வைச் சந்தித்திருந்த நிலையில், மோடி அரசின் அதிரடி மற்றும் தொலைநோக்கு நடவடிக்கைகளால் இன்று இந்திய பாதுகாப்புத் துறை அசைக்க முடியாத மாஸ் கூட்டணியாக உருவெடுத்துள்ளது!
