சென்னை : மஹாராஷ்டிரா அரசியலை மிஞ்சும் அரசியல் நாடகங்கள் தமிழகத்தில் அரங்கேறிவருகிறது. ராணுவத்தை போல தனது கட்சியை கட்டிக்காத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதா. அவரது மறைவுக்குப்பின் எழுந்துள்ள உட்கட்சிப்பூசல் அதிமுகவின் வீழ்ச்சிக்கே வித்திடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என எடப்பாடி தரப்பும் இரட்டைத்தலைமை வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பும் கோஷ்டி மோதலில் ஈடுபட்டுவருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் நேற்று சென்னையில் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதற்கு முதல்நாள் வானகரம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பன்னீர்செல்வத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு சர்ச்சைகள் எழுந்தது.
நேற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு கூடியது. எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கையை பொதுக்குழு ஏற்றுக்கொண்டதுடன் கூட்டம் நிறைவடைந்தது. மேலும் அடுத்த பொதுக்கூட்டம் ஜூலை 11 ல் நடத்தப்படும் என அவைத்தலைவர் ஹுசைன் அறிவித்தார்.
நேற்று அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசைன் அறிவிப்பையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக மேடையை விட்டு வெளியேறினார். அதைத்தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் கடும் ஆலோசனையில் ஈடுபட்டார். அவரை தமிழக பிஜேபி தலைவரான அண்ணாமலை மற்றும் முக்கிய பிஜேபி நிர்வாகிகள் சந்தித்தனர்.
அந்த சந்திப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஓ.பன்னீர்செல்வம். மனோஜ் பாண்டியன் ஜெசிடி பிரபாகர் வைத்திலிங்கம் ஆகியோர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு ஒன்றை அளித்துள்ளார். ஜூலை 11 அன்று அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் கூட்டவுள்ள பொதுக்குழுவிற்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ள ஓபிஎஸ் கட்சி விதிகளில் மாற்றம் செய்வதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு மாற்றாக பொதுச்செயலர் பதவியை கொண்டுவர முயற்சிப்பதாகவும் தனது கையொப்பமின்றி பொதுக்குழு கூட்டத்தை கூட்டக்கூடாது என வலியுறுத்தக்கோரியும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.