24 special

ஒரு லட்சம் கொடுங்க உங்களுக்கு மாசம் 20,000 லாபம் தரேன்..! ஆன்லைன் டிரேடிங் எனக்கூறி மோசடி செய்த பெண்


 இந்த உலகமே ஒரு விஷயத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அதை கண்ணை மூடி கொண்டு செல்லலாம் பணத்திற்காக தான் என்று! ஏனென்றால் அப்படி ஒரு தேவையும் அவசியமும் பணம் கொண்டுள்ளது! மேலும் பணத்தை சம்பாதிப்பதற்கு பல வழிகளை நாம் கையாண்டாலும் அதன் மூலம் பெறப்படுகின்ற பணத்தை இன்னும் வருங்காலத்தில் எப்படி பெருக்கலாம் என்ற முயற்சியும் தேடலும் தற்போது பலரிடம் உள்ளது. ஏனென்றால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு 2000 ரூபாய்க்கு இருந்த மதிப்பும் தற்போது ஒரு 2000 ரூபாய் இருக்கின்ற மதிப்பு முற்றிலும் வேறுபட்டுள்ளது. அதனால் நம்மிடம் தற்போது நம்மிடம் இருக்கும் பத்தாயிரம் ரூபாய் கூட இன்னும் வருகின்ற காலத்தில் குறைந்த மதிப்பை கொண்டதாக மாறிவிடும். அதற்காகவே தற்போது பல பங்குச் சந்தைகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள், ஆன்லைன் டிரேடிங் இயங்கி வருகிறது அவற்றில் நம்முடைய பணத்தை முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் நமது பணம் நம்மிடம் இருப்பதோடு அதிக மதிப்பையும் பெற்று இருக்கும் சில லாபத்தையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். 


ஆனால் இதில் பல முறைகேடுகளும் ஏமாற்று வேலைகளும் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. அதிலும் குறிப்பாக பங்குச்சந்தை, ஆன்லைன் டிரேடிங் மற்றும் முதலீடுகளில் நாம் பணத்தை செலவிடுவதன் மூலம் சில நேரங்களில் அதில் எதிர்மறையான முடிவும் கிடைக்கலாம் சில நேரங்களில் நினைத்ததற்கு மாறான ரெட்டிப்பான லாபமும் கிடைக்கும். அப்படிப்பட்ட அதிக சந்தேகங்களையும் உறுதிப்படுத்த முடியாத விளைவுகளையும் கொண்ட இவற்றை பயன்படுத்தியே பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு மோசடி செய்து தமிழ்நாட்டில் இருந்து தப்பித்து துபாய் சென்று அங்கும் தனது மோசடி வேலையை ஒரு பெண் நிகழ்த்தியுள்ள சம்பவம் வெளியாகி உள்ளது. அதாவது, கோவை பணிமனை பகுதியை சேர்ந்த மதுமிதா என்பவர் ஆன்லைன் டிரேடிங் மூலம் புதிதாக ஆன்லைனில் டிரேடிங் செய்யும் தொழிலை தொடங்க உள்ளதாக கூறி தன்னுடன் படித்தவர்களையும் தனக்கு தெரிந்த பலரிடமும் ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 20 ஆயிரம் வரை லாபம் பெறலாம் என்று கூறி இரண்டரை கோடி ரூபாய் வரை 20 பேரிடமிருந்து முதலீடாக பெற்றுள்ளார்!

 இதில் முதல் மாதத்தில் மட்டும் லாபத்தொகை என தன்னிடம் முதலீடு செய்த அனைவரிடமும் பணத்தை கொடுத்துள்ளார் மதுமிதா அதற்குப் பிறகு தான் முதலீடு செய்த நிறுவனத்தில் அனைத்தும் நஷ்டம் ஆகிவிட்டதாகவும் விரைவில் உங்களது பணத்தை நான் திரும்ப தந்து விடுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்குப் பிறகு இவரைக் குறித்த எந்த தகவலும் கிடைக்காமலும் தொடர்பு கொள்ள முடியாமலும் பாதிக்கப்பட்டவர்கள் தேடி வந்துள்ளனர் பிறகு தான் இவர் இதே செயலை துபாயிலும் நிகழ்த்தி அங்கு இரண்டு பேரையும் ஏமாற்றியுள்ளார் என்பதை கோவையில் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்துள்ளனர்.

இருப்பினும் தன்னை சுதாரரித்துக் கொண்ட மதுமிதா துபாயில் இருந்து கேரளாவிற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார் அப்பொழுது அவருக்கு உதவி செய்வதை போன்று ஒருவர் மதுமிதாவை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்துச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அதற்குப் பிறகு அவரை நேரடியாக காவல்துறையிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்து மதுமிதா முதலீடு செய்த பணம் அனைத்தும் நஷ்டமாகி விட்டது கால அவகாசம் கொடுத்தால் நான் அனைத்தையும் திருப்பி தந்து விடுகிறேன் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறியுள்ளார். இந்த சம்பவம் கோவை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் தொடர்ச்சியாக ஆன்லைன் டிரேடிங் பங்குச்சந்தை என சைபர் கிரைம்கள் அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் இன்னும் ஜாக்கிரதையாக தங்கள் சேமிப்பை பாதுகாக்க வேண்டும் வளர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் அறிவுரைகள் பறக்கிறது!