24 special

தவிக்கும் அண்டை நாடுகள்.. தடையின்றி இயங்கும் இந்தியா! உலகமே வியந்து பார்க்கும் மோடியின் மேலாண்மை

PMMODI,VLADIMIRPUTIN
PMMODI,VLADIMIRPUTIN

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை இன்று சந்தித்து வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும், அதனால் ஏற்பட்டுள்ள நிர்வாக முடக்கமும் உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை பாடமாக அமைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல், போக்குவரத்து மற்றும் மின்சார நுகர்வைக் குறைக்க அந்நாட்டு அரசு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கும் என அறிவித்துள்ளது. மார்ச் 18 முதல் புதன்கிழமைகளும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு, அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 


ஒரு நாட்டின் கல்வி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு எரிபொருள் தட்டுப்பாட்டால் சரிவது என்பது அந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் உச்சமாகும். ஆனால், அதே காலகட்டத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளை இந்தியா மிக லாவகமாக எதிர்கொண்டு வருவது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கும், சாதுரியமான ராஜதந்திரத்திற்கும் சான்றாகும். உக்ரைன்-ரஷ்யா போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் போது, மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல், இந்திய மக்களின் நலனை முன்னிறுத்தி ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயைப் பெற மோடி அரசு எடுத்த துணிச்சலான முடிவு இந்தியாவை இன்று பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளது. 

உலகில் பல நாடுகள் எரிபொருள் விலையேற்றத்தால் திணறி வரும் நிலையில், இந்தியாவில் தட்டுப்பாடின்றி பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை உறுதி செய்தது சாதாரண சாதனையல்ல. பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெறும் இறக்குமதியை மட்டும் நம்பியிருக்காமல், எத்தனால் கலப்பு திட்டத்தை (Ethanol Blending) முன்னெடுத்ததன் மூலம் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்தியுள்ளது. 2014-ல் வெறும் 1.4 சதவீதமாக இருந்த எத்தனால் கலப்பு, இன்று 10 சதவீதத்தைக் கடந்து 20 சதவீத இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருவது இந்தியாவின் எரிபொருள் தன்னிறைவுக்கான பெரும் பாய்ச்சலாகும். 

அண்டை நாடுகள் இருளில் மூழ்கி, நான்கு நாள் வேலை வாரத்திற்குத் தள்ளப்படும் போது, இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்திலும் உள்கட்டமைப்பு வளர்ச்சியிலும் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.  இதனால் தான், உலகமே தத்தளிக்கும் போது இந்திய குடிமக்கள் எந்தவித தடையுமின்றி தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடர முடிகிறது. பாரதப் பிரதமர் மோடியின் இத்தகைய தீர்க்கமான முடிவுகளால், இந்தியா இன்று பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதோடு, தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு அசைக்க முடியாத சக்தியாகவும், நிலையான நாடாகவும் உலக அரங்கில் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.