24 special

"நடக்கத்தான் போகிறது" உடனே வாங்கி வைத்து கொள்ளுங்கள் அண்ணாமலை புதிய வேண்டுகோள்..!

Annamalai
Annamalai

தமிழக மக்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய விவகாரம் ஒன்றினை சுட்டி காட்டி இருக்கிறார் கடந்த சில மாதம் முன்பு ஆளுக்கு ஒரு யூபிஎஸ் வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்றேன், இனி அதுவும் போதாது வீட்டிற்கு ஒரு ஜெனரேட்டர் வாங்கி வைத்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருப்பதுடன் என்ன நடக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார் அது பின்வருமாறு :-


திமுக ஆட்சியில் தமிழகம் தற்போது இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்கிறதோ அப்போதெல்லாம் கடுமையான மின்வெட்டும் ஏற்படுவது ஏன்?.

மற்ற ஆட்சிகளில் மின்சார அமைச்சர், மின்சார துறை  என்று இருப்பது வழக்கம்.ஆனால் திமுக ஆட்சியில் மட்டும் "மின்வெட்டுத் துறை" அமைச்சராகவும், அது "மின்வெட்டுத் துறையாகவும்" செயல்படும் காரணம் என்ன?

தொடர்ந்து மின் வெட்டு. காரணம் கேட்டால், மத்திய மின் தொகுப்புதான்  காரணம் என்று ஒரு கட்டுக்கதையை அமைச்சர் அவிழ்த்து விடுகிறார். மத்தியத் தொகுப்பில் நிலக்கரி பற்றாக்குறை என்று ஒரு பொய்ச் செய்தியைக் கூறுகிறார்.

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு 37% சதவீதத்திற்கும் கூடுதலாக நிலக்கரி உற்பத்தியில், நாம் சாதனை செய்து காட்டி இருக்கிறோம். இந்தியா இதுவரை இல்லாத சாதனையாக 77-மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியை செய்து காட்டியிருக்கிறது. இந்தியாவில் பிற மாநிலங்களில் இல்லாத மின்வெட்டு தமிழகத்தில் மட்டும் வருவதற்கான காரணம் என்ன என்பதை மக்களும் ஊடகங்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் தற்போது 2.2 கோடி மெட்ரிக் டன்கள் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் ”டாஞ்ஜட்கோ” “TANGEDCO” ( தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்) எனப்படும் மின்சாரவாரியம்  லட்சக்கணக்கான கோடி நட்டத்தில் இயங்கினாலும், அது பொன் முட்டையிடும் வாத்தாக தமிழக ஆட்சியாளர்களுக்குப் பயன்படுகிறது. கடந்தாண்டு மட்டும் செயற்கை மின்வெட்டை உருவாக்கி அதன் மூலம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி 2000 கோடி ரூபாய் தனியார் வசம் போயிருக்கிறது.

தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, மின்வெட்டை அமல்படுத்தி, அவசரம் என்ற குறிப்பு எழுதி, தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி, அதில் மிக அதிக அளவு கமிஷன் அடிப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, இதுபோன்ற, செயற்கையான மின்தட்டுப்பாடு தமிழக அரசால் உருவாக்கப்படுகிறது.

இதற்கு என்னால் ஆதாரங்களைக் கூட கூற முடியும். கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தூத்துக்குடியில் இருக்கும் அனல் மின் நிலையத்தின் நான்கு மின் உற்பத்தி கொதிகலன்கள், இயங்கவில்லை. ஏன் இயங்கவில்லை? அது தமிழக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கான  நிலக்கரி கையிருப்பு இருந்தும்கூட, மின்னுற்பத்தியை நிறுத்த காரணம், தமிழ்நாட்டில் பயன்பாட்டை விட அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவதால் நிறுத்துகிறோம் என்று மத்திய மின் பகிர்வு ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருக்கிறது.  

பயன்பாட்டை விட அதிக மின்சாரம் கையிருப்பு இருந்தால் ஏன் மின்தடை வருகிறது. திமுக அரசின் முக்கிய நோக்கமே, கொள்ளை லாபம் கருதி செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்குவதே. அதற்காகத்தான் மின் தயாரிப்பை தூத்துக்குடியில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

இப்படி மின்வாரியத்தில், பெருத்த லாபத்தைச் சுரண்டி எடுக்கும், புதிய சித்தாந்தத்தை 2006ஆம் ஆண்டு ஆட்சியில் இருக்கும்போது செய்து காட்டியது அப்போதைய திமுக அரசு. அதிலிருந்துதான் டாஞ்ஜட்கோ என்ற மின்சார வாரியம் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நட்டத்தை சந்திக்க தொடங்கியது.

2006ஆம் ஆண்டிலிருந்து இப்போது 2022ஆம் ஆண்டு வரை மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை தமிழக அரசு மக்கள் முன் வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது என்று அமைச்சர் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள அனல் மின் நிலைய PLF என்னும் தயாரிப்பு அளவு  குறியீட்டு எண் 85 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் 72 ஆயிரம் டன் தேவைப்படும்.

அதாவது, இந்த அனல் மின் நிலையங்கள், 100 சதவீதத் தகுதியில், 85% பயன்பட்டால் தான், 72 ஆயிரம் மெட்ரிக் டன் தேவைப்படும்.ஆனால், தமிழகத்தில் அதிகபட்ச அளவாக பயன்பட்ட PLF என்னும் தயாரிப்பு அளவுக்  குறியீட்டு எண் 57 சதவீதத்தை தாண்டியதில்லை. இந்தியாவிலேயே, இதுவே மிக மிக குறைவான PLF என்னும் தயாரிப்பு அளவுக்  குறியீடு. அது தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்கள் அதன் இயங்குதிறன் என்னும் நூறு சதவீதத் தகுதியில் 57 சதவீதம் மட்டுமே செயல்பட முடிகிறது அல்லது முனைகிறது.

காரணம், பிஜிஆர் போன்ற தரமற்ற நிறுவனங்கள், மேட்டூர் ஒன்று மற்றும் இரண்டாம் அனல் மின் நிலையங்களை மிக மோசமாக கட்டமைப்பு செய்ததை என் பேட்டிகளில் கூறி இருக்கிறேன். தமிழக மக்கள் அனைவரும் ஒரு யூபிஎஸ் UPS வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று அப்போதே கூறியிருந்தேன். இப்போதும் சொல்கிறேன், அடுத்த மாதம் எல்லாம் மின்வெட்டு அதிகரிக்கும். தமிழக மக்கள் எல்லாம் ஒரு ஜெனரேட்டர் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இல்லை என்றால் வெளிச்சம் இல்லாமல் மின்விசிறி இல்லாமல் பிள்ளைகள் பரீட்சைக்கு படிக்க முடியாமல், குடும்பத் தலைவர்கள் பணிக்குச் செல்ல முடியாமல், குடும்பத்தலைவிகள் சமைக்க முடியாமல், நோயாளிகள் வயதானவர்கள் உறங்கவும் முடியாமல் துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை, விடியல் ஆட்சியாளர்களால் தங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது!

அனைத்து மாநிலங்களையும் சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி தமிழகத்திற்கு 3275 மெகாவாட் இலக்கு நிர்ணயித்தது. ஆனால் தமிழகம் இதுவரை சாதித்தது வெறும் 325 மெகாவாட் மட்டுமே. குற்றம் சொல்வதற்காக மட்டும் மத்திய அரசைப் பயன்படுத்தும் திமுக அரசு, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது. இலவசமாக கிடைக்கும் சூரிய மின் சக்தியை பயன்படுத்துவதற்கு என்ன தடை? உங்களால் லாபம் சம்பாதிக்க முடியாது என்ற காரணத்திற்காக மத்திய அரசு பெரிய அளவில் மானியம் கொடுத்து உருவாக்கும் சூரிய மின்சக்தியை உற்பத்தி  செய்யாமல் மாநில அரசு தள்ளிப் போடுவதற்கு  காரணம் என்ன?

எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது குறை சொல்லி, தங்கள் திறமையின்மையை, தங்கள் செயல் இன்மையை, வெளிப்படுத்துகிறார்கள். எல்லாமே மத்திய அரசு செய்ய வேண்டும் என்றால் பிறகு நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கிறீர்கள்.

இப்போதும் சொல்கிறேன், இன்னும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. மக்களை இந்த செயற்கையான மின்வெட்டில் இருந்து எடுக்க முன்வாருங்கள். மின்வெட்டு வேறு மின்தடை வேறு என்று பசப்பு மொழியில் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து கொஞ்சமேனும் மக்களுக்காக செயல்படுங்கள். மின்நிலையத்தின் PLF ஃபேக்டரை அதிகப்படுத்துங்கள்.

மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்தி தொடர்ந்து மக்களை முட்டாளாக்க நினைக்காதீர்கள். தனிப்பட்ட லாப நோக்கத்திற்காக, வாக்களித்த மக்களை எல்லாம் மின்தடை ஏற்படுத்தி வாட்ட நினைக்காதீர்கள்.

தமிழகத்தை இருண்ட காலத்திற்கு தயவுசெய்து எடுத்துச் செல்லாதீர்கள் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மக்கள் நலம் கருதி, தாழ்மையுடன் வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.