வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், தன் சொந்த ஊரான காட்பாடியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை இன்று சென்னைக்கு அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரை நேரடியாக பார்வையிடவைத்தார்.
முன்பெல்லாம் அரசு பள்ளியில் படிப்பவர்கள் அதிக பட்சமாக அருகில் உள்ள பூங்காவிற்கோ அல்லது குழந்தைகள் கண்டுக்களிக்கும் சினிமாவிற்கோ ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது சில ஆண்டுகளுக்கு ஒரு முறையோ அழைத்து செல்வது வழக்கம். தற்போது அப்படி எல்லாம் இல்லாமல், அடுத்தக்கட்டமாக இன்றைய மாணவர்களுக்கு அரசியல் தெளிவும் ஏற்பட வேண்டும் என்பதற்காக இன்று, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்களின் ஏற்பாட்டில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரை பார்க்கும் வகையில் அதற்கான அனுமதி பெற்று ஏற்பாடு செய்திருந்தார்.
குறிப்பாக காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காட்பாடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கேயநெல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாதிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து உள்ள 354 மாணவ, மாணவிகள் இன்று பார்வையிட்டனர்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய மாணவ செல்வங்களை, கடற்கரைக்கு அழைத்து சென்று, அங்கு அண்ணா சதுக்கம், எம் ஜி ஆர், கலைஞர், ஜெயலலிதா நினைவிடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். மேலும் இதற்கு முன்னதாக சென்னைக்கு முன்பு எப்போதும் கூட வந்திராத மாணவ செல்வங்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாணவ செல்வங்களுக்கு பள்ளி படிப்பின் போதே, அரசியல் ஞானம் குறித்தும், மாநிலத்தில் எப்படி ஆட்சி நடக்கிறது என்பது குறித்த ஒரு விழிப்புணர்வை இந்த கல்வி சுற்றுலா ஏற்படுத்தி உள்ளது. இந்த கல்வி சுற்றுலாவுக்காக, தன் கல்லூரி வாகனத்தால் மாணவர்களை அழைத்து சென்றது மட்டுமல்லாமல், மற்ற செலவினங்கள் அனைத்தையும் கதிர் ஆனந்த் தன் சொந்த செலவில் செய்து உள்ளார் என்பது கூடுதல் தகவல்.