
அரசியல் விமர்சனங்கள் வரலாம், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சியை மதிப்பிட வேண்டுமென்றால் உணர்ச்சிகளால் அல்ல, எண்களாலும் சாதனைகளாலும் தான் மதிப்பிட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை நேர்மையாக ஒப்பிட்டுப் பார்த்தால், இது சாதாரண ஆட்சி அல்ல, இந்தியாவின் வளர்ச்சி பாதையை மாற்றிய ஆட்சி என்பதுதான் வெளிப்படையான உண்மை. சிலர் இன்னும் மதம், மொழி, பிராந்தியம் போன்ற விவாதங்களுக்குள் சிக்கிக்கொண்டு இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டை முன்னேற்றுவது அந்த வார்த்தைகள் அல்ல, வளர்ச்சியும் நிர்வாக திறனும்தான்.
ஒரு காலத்தில் உலக நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கிக்கொண்டிருந்த இந்தியா இன்று உலக நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் சக்தியாக உருவெடுத்துள்ளது. வெறும் சில நூறு கோடி ரூபாய் அளவில் இருந்த பாதுகாப்பு ஏற்றுமதி இன்று பல மடங்கு உயர்ந்து புதிய உச்சங்களை தொட்டுள்ளது.
ஒரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே நஷ்டம், வாராக்கடன், நிர்வாக சீர்கேடு என்ற நிலை இருந்தது. பொதுத்துறை வங்கிகள் பெரும் சிக்கல்களில் சிக்கியிருந்தன. ஆனால் கடந்த ஆண்டுகளில் வங்கித்துறை சீர்திருத்தங்கள், நிர்வாக மாற்றங்கள் மற்றும் நிதி ஒழுங்குமுறைகள் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பும் செயல்திறனும் உயர்த்தப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் லாபப் பாதைக்கு திரும்பியுள்ளன. அரசு சொத்துக்கள் சுமையாக அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கான சொத்தாக மாறியுள்ளன.
இந்தியாவின் சாலை கட்டமைப்பை எடுத்துக்கொண்டாலும் . தேசிய நெடுஞ்சாலைகள் விரிவடைந்துள்ளன. கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் சாலைகள் உருவாகியுள்ளன. இன்று சிறிய நகரங்களில்கூட விமான சேவைகள் கிடைக்கின்றன. ரயில்வே துறையில் வரலாறு காணாத அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டு, புதிய பாதைகள், நவீன ரயில்கள், நிலைய மேம்பாடுகள், சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள் என இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்பு புதிய உயரத்தை எட்டியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. அதேபோல் துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் பெரிதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தகத்தில் போட்டியிடும் இந்தியாவுக்கு இது மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. சீனா தனது கட்டமைப்பு வலிமையால் உலக உற்பத்தி மையமாக மாறியதைப் போல, இந்தியாவும் தனது கட்டமைப்பு வலிமையை உருவாக்கும் பணியில் வேகமாக முன்னேறி வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நக்சல் பாதித்த பகுதிகள் வரை, பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், ரயில்கள், கல்வி, மருத்துவம், இணைய இணைப்பு, முதலீடுகள் போன்ற வளர்ச்சி திட்டங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஒரு அரசின் மொழி என்ன என்று கேட்டால் பதில் ஒன்றுதான் – வளர்ச்சி. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, நாட்டின் பொருளாதார வலிமையை அதிகரிப்பது, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவது – இதுவே எந்த நல்ல அரசின் மொழியாக இருக்க வேண்டும். அந்த மொழியைத்தான் மோடி அரசு தொடர்ந்து பேசி வருகிறது. விமர்சனங்கள் இருக்கலாம்; அது ஜனநாயகத்தின் ஒரு பகுதி. ஆனால் வளர்ச்சி என்ற உண்மையை மறுக்க முடியாது.
