24 special

தலையில் குட்டிய தலைமை..! கப்சிப் ஆன மாநில துணைத்தலைவர்..!


மேற்குவங்கம் : அரசியல் கட்சி தலைவர்கள் பலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி கூறுவதுண்டு. கருத்து சொல்லும் தலைவர்கள் ஆளும்கட்சியாக இல்லாதபோது அது ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஆனால் அந்த கருத்தை சொல்பவர் பிஜேபியாக இருக்கும்பட்சத்தில் சிறு கருத்து என்றாலும் உலக அளவில் ஊடகங்களால் விவாதத்திற்கு உட்படுத்தப்படும்.


இந்நிலையில் முன்னாள் மேற்குவங்க மாநில பிஜேபி தலைவரும் இந்நாள் துணைத்தலைவருமான திலீப் கோஷின் ஒரு விமர்சனம் டெல்லி தலைமையை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது. 2021ல் மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 200 சீட்டுக்கள் இலக்கு வைத்து பிஜேபி களமிறங்கியது. ஆனால் படுதோல்வியையே சந்தித்தது.

இதற்க்கு காரணம் மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் என பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார் திலீப் கோஷ். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திலீப் கோஷ் தலைவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டு துணைத்தலைவர் ஆக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சுகந்தா மஜூம்தார் மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஏப்ரலில் திலீப் செய்தியாளர்கள் சந்திப்பில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

அதில் " கட்சி நீண்ட காலமாக போராடி வருகிறது. அனுபவமும் களநிலவரமும் அறிந்த பலர் மாநிலத்தில் உள்ளனர்.  அவர்களை போராட வைக்கவேண்டும். சுகந்தா மஜூம்தாருக்கு என்னை விட அனுபவம் குறைவு. சட்டமன்ற தேர்தலில் கட்சியை கையாள தவறிவிட்டார்" என கடுமையாக விமர்சித்திருந்தார். இது மாநில பிஜேபிக்குள் சலசலப்பை உருவாக்கியது. 

அதைத்தொடர்ந்து நேற்று பிஜேபி தலைமை பொறுப்பாளர் அருண்சிங் திலீப் கோஷுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் " மத்திய தலைமைக்கு அவமானத்தை தேடித்தரும் வகையில் உங்கள் கருத்துக்கள் வெளிவந்துள்ளது. கடந்தகாலத்தில் செய்த தவறை மீண்டும் செய்கிறீர்கள். நேர்காணலின் போதும் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் சொல்லக்கூடிய உங்கள் கருத்து கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என நீங்கள் அறிவீர்கள். 

கட்சியின் வளர்ச்சிக்கான உங்கள் பணிகள் அர்ப்பணிப்புடன் இருந்தபோதும் உங்களின் சில அறிக்கைகள் மாநில தலைவர்களை வேதனைக்குள்ளாக்கியிருப்பதுடன் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி உங்கள் கருத்துக்களிலும் விமர்சனங்களிலும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுங்கள்" என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.