
தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. குற்றச் செயல்கள், அடாவடி, அரசியல் திமிர், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்ட நிலையில், ஆட்சியாளர்களின் அலட்சியம் மக்கள் உயிருக்கும் சொத்துக்கும் நேரடியான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
அதன் சமீபத்திய உதாரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக இளைஞரணி நிர்வாகியும், வார்டு கவுன்சிலருமான ரமேஷ் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் கொடூரமாக தாக்கியுள்ளார். வீட்டின் அருகே சென்றபோது அங்கு வளர்க்கப்பட்ட நாய் குரைத்தது என்ற அற்பமான காரணத்துக்காக இந்த மனிதநேயமற்ற தாக்குதல் நடந்துள்ளது.
அரசியல் பதவி மற்றும் கட்சி பின்னணியை கவசமாகக் கொண்டு, சாதாரண மக்கள்மீது வன்முறை நிகழ்த்தும் இந்த அராஜகம், தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. காவல்துறைக்கு பயமின்றி, சட்டத்திற்கும் நீதிக்கும் மதிப்பில்லாமல் ஆளும் கட்சியினரே இப்படிப் பட்ட செயல்களில் ஈடுபடுவது, மாநிலத்தின் எதிர்காலம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்புகிறது.
இது தனிப்பட்ட சம்பவமல்ல. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை, ரவுடியிசம் போன்றவை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. பல இடங்களில் திமுக நிர்வாகிகள் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் வெளிவந்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஆட்சியின் செயலற்ற தன்மையையும், குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் மறைமுக பாதுகாப்பையும் சுட்டிக்காட்டுகிறது.
*முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே,*
“சட்டம் அனைவருக்கும் சமம்” என்று மேடைகளில் பேசுவது போதாது. உங்கள் ஆட்சியில் திமுக நிர்வாகிகளின் அடாவடி ஆட்சியாக மாறியுள்ள இந்த நிலைக்கு யார் பொறுப்பு? மக்கள் பாதுகாப்பு என்பது விளம்பர வாசகமல்ல; அது ஆட்சியின் அடிப்படை கடமை. அரசியல் திமிர் தலைதூக்கும் இந்த ஆட்சியில், மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்
