உத்தரகாண்ட் : 2022 பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி படுதோல்வியடைந்திருந்தார். ஆனாலும் உத்தரகாண்ட் முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் வெற்றிபெற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்.
அதைத்தொடர்ந்து சம்பவத் தொகுதி பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்து முதல்வருக்காக விட்டுக்கொடுத்தார். அதன்பின்னர் கடந்தவாரம் நடைபெற்ற இடைத்தேர்தலில் சம்பவத் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா கஹடோரியை 55,025 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
நேற்று முதல்வரின் வெற்றியை தொடர்ந்து பிஜேபி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாரத பிரதமர் மோடி " உத்தரகாண்டின் ஆற்றல் மிக்க முதல்வர் புஷ்கர் தாமிக்கு சம்பவத்தில் சாதனை படைத்ததற்கு வாழ்த்துக்கள். உத்தரகாண்ட் முன்னேற்றத்துக்கு அவர் இன்னும் கடுமையாக உழைப்பார் என நான் நம்புகிறேன்.
பிஜேபி மீது நம்பிக்கை வைத்த சம்பவத் மக்களுக்கு நன்றி. பிஜேபி காரியகர்த்தாக்களின் அயராத கடின உழைப்பை நான் மனமார பாராட்டுகிறேன்" என பாரத பிரதமர் மோடி முதல்வர் புஷ்கர் சிங்கிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். கடந்த பிப்ரவரியில் தனது தொகுதியான காதிமாவில் போட்டியிட்ட புஷ்கர் சிங் தாமி படுதோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அந்த தேர்தலில் பிஜேபி அபார வெற்றி பெற்றிருந்தது. அதேபோல தற்போது நடந்த இடைத்தேர்தலிலும் சம்பவத் தொகுதியில் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்காக யோகி வாக்குகளை சேகரித்தார். இரண்டாவது முறையாக யோகியின் பிரச்சாரம் பிஜேபிக்கு கைகொடுத்திருப்பதாக மாநில பிஜேபி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.