மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, தனது முகநூல் பக்கத்தில், துர்கா ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசிய மகிழ்வான நிகழ்வை பற்றி பதிவிட்டுள்ளார். அதில், திருவெண்காட்டில் துர்கா அம்மையாரைச் சந்தித்தேன்...!
இன்று காலை கழகத்தின் தேர்தல் பணித் துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில்செல்வன் அவர்களின் தாயார் படத்திறப்பு நிகழ்விற்காக, மயிலாடுதுறையில் இருந்து அகரப்பெருந்தோட்டம் சென்றேன்.அப்போது, வழிநெடுகிலும் இயக்கக் கொடிகளும், கட்சிப் பதாகைகளும் இருந்ததைக் கண்ணுற்றேன்.காரில் உடன் வந்தவர்கள் சொன்னார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவியார் அம்மையார் துர்கா ஸ்டாலின் அவர்களுடைய சொந்த ஊர் திருவெண்காடு. அவர் இப்போது அங்கு வந்திருக்கிறார்.
நம் கட்சிக் கொடிகள் இவ்வளவு கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து, யார் வருகிறார்கள் என்று கேட்டிருக்கிறார்.தங்கள் வருகை குறித்தும் ஆர்வமுடன் விசாரித்திருக்கிறார் என்றார்கள். இவ்வளவு பரிவுடன் கேட்ட அவர்களை திருவெண்காடு இல்லத்தில் சந்திப்போம் என முடிவெடுத்தேன்.
அம்மையார் துர்கா அவர்கள், நான் வந்த விவரம் தெரிந்து பரிவுடன் என்னை வரவேற்றார். அவருடைய உடன் பிறந்த சகோதரிக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது திமுகவைச் சேர்ந்த சீர்காழி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.தேவேந்திரன், கிளைச் செயலாளர் டைலர் துரை ஆகியோரும் உடன் இருந்தனர். நானும், என்னுடன் வந்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன், நாகை மாவட்டச் செயலாளர் இராமனஞ்சேரி ஸ்ரீதர், மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சுப்புராஜ், வழக்கறிஞர் செந்தில்செல்வன் ஆகியோரை அம்மையாருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
பின்னர், என்னிடம் அப்பா வைகோ அவர்களின் உடல் நலன் குறித்து விசாரித்தார். நானும், தமிழக முதல்வர் அவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் அம்மையார் துர்கா அவர்களின் பங்களிப்பு குறித்து பேசினேன்.
தென்மாவட்டங்களுக்கு வரும்போது எங்கள் கலிங்கப்பட்டிக்கு வாருங்கள் என்றேன்.ஏற்கனவே, உதயநிதி குழந்தையாக இருக்கும்போது நான் கலிங்கப்பட்டி வந்திருக்கிறேன்.
அப்பா, அம்மா என்னை மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றனர். உங்கள் பாட்டி மாரியம்மாள் கைபக்குவத்தில் அசைவ உணவு சமைத்து பரிமாறினார். சனிக்கிழமையன்று நான் வழக்கமாக அசைவ உணவு உட்கொள்ளும் வழக்கம் இல்லை.ஆனபோதும், நான் வருகிறேன் என்றதும், அவர் ஆசையாகச் சமைத்த உணவை பாட்டி மாரியம்மாளுக்காக அன்று உட்கொண்டேன் என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மனைவி என காட்டிக் கொள்ளாமல், இன்முகத்துடன் வரவேற்றுப் பேசிய அம்மையார் துர்கா அவர்களின் பண்பு நலன் என்னை ஈர்த்தது. அன்புடன் துரை வைகோ தலைமைக் கழகச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 24.04.2022 - இவ்வாறு அதில் பதிவிட்டு உள்ளார்.