திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் அவர் தொடர்புடைய நட்சத்திர ஓட்டல், மதுபான ஆலைகள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.சொத்துக்குவிப்பு புகாரின்பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்த புகாரின்பேரில் ஏற்கனவே அமலாக்கத்துறை இவருக்கு சொந்தமான 88 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகன் தொடர்பான முக்கிய இடங்களில் சோதனை நடத்துகின்றனர். நேற்று சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகின. தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியில் உள்ள அகரம் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது வீட்டின் பின்பக்கம் பாரத் பல்கலைக்கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகம் இயங்கி வருகிறது. அதில் அனைத்து பகுதிகளும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் எஸ்ஜேஜே நிறுவனத்தின் அலுவலகமும், பள்ளி ஒன்றின் நிர்வாக அலுவலகமும் அதே முகவரியில் இயங்கி வருகிறது. அந்தப் இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டும் ஜெகத்ரட்சகன் இடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவரது கல்வி நிறுவனர்களில் எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர், அவர்களிடம் எவ்வளவு நன்கொடை கட்டணம் வசூலிக்கப்பட்டது முறையான கணக்கு காட்டப்பட்டுள்ளதா?. அதற்கு உண்டான ரசீதுகள் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அடையாறில் உள்ள அவரது வீட்டில் ரூ.2000, ரூ, 500 நோட்டுகளை (ரூ.2 கோடி) கட்டுக்கட்டாக அதிகாரிகள் பறிமுதல் செய்து, மெஷின் மூலம் எண்ணி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை காரில் அழைத்து சென்றுள்ளனர். மேலும், அடையாறு வீட்டில் ஆவணங்களுடன் இருந்த பெண்ணை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ச்சியாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரகசிய அறை இருக்கிறதா? என்ற கோணத்தில் பெண் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதனால், அவருக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.தொடர்ச்சியாக ஜெகத்ரட்சகனின் மற்றொரு வீட்டில் உள்ள லாக்கரை திறப்பதற்காக சாவியுடன் ஊழியர்களை அழைத்து சென்றுள்ளனர் வருமானத்துறையினர். மேலும், ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்தஆவணங்களையும், வருமான வரித் துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. அலுவலக கணினி, 'ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ்' போன்ற 'டிஜிட்டல்' ஆவணங்களையும், அதிகாரிகள் எடுத்துள்ளனர். ஜெகத்ரட்சகனின் கல்வி நிறுவனத்தில் இருந்த சொகுசு காரில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும், முறையாக கணக்குகளை தாக்கல் செய்யாத புகாரிலும், இந்த சோதனை நடந்து வருகிறது. முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் விரைவில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்து கொண்டு இருக்கிறது.