கோவில்களில் இனி கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பங்குபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்து இருந்ததற்கு கடும் எதிர்வினையை கொடுத்துள்ளார் திராவிட. கழக தலைவர் வீரமணி, முதலில் வெளியான செய்தியை நம்பவில்லை என்றும், வாட்ஸாப்பில் வீடியோ பார்த்த பிறகுதான் நம்பியதாகவும் தெரிவித்துள்ளார் வீரமணி இது குறித்து வீரமணி காட்டமாக தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
இந்தியக் கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்ன ஒரு கருத்து ஊடகங்களில் முக்கிய கருத்தாக எதிரும் புதிருமாக உலா வந்து கொண்டுள்ளது.‘இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற ஏடுகளும் முக்கிய இடம் கொடுத்து வெளியிட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் சூடு பிடித்துள்ளன “கோவில் திருவிழாக்களை கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஏன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது? பண்பாட்டு ரீதியான பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் - இடதுசாரிகள் ஏன் கையில் எடுக்கக் கூடாது? அவற்றை ஏன் பிஜேபியிடம் விட்டுவிட வேண்டும்?” என்று தோழர் பாலகிருஷ்ணன் பேசியதாக வெளிவந்து கொண்டு இருக்கிறது.
இது தொடர்பான செய்தி ‘இந்து’ ஏட்டில் வெளிவந்தவுடனேயே அதைப்பற்றி எழுதிட வேண்டும் என்று எண்ணினோம். சி.பி.எம்.மின் அதிகாரப் பூர்வ ஏடான ‘தீக்கதிரில்’ அவ்வாறு பேசியதாக வரவில்லை என்பதால் அமைதி காத்தோம். அது உண்மையாக இருக்கக் கூடாது என்றும் கூட எண்ணினோம்.
ஆனால் ‘வாட்ஸ் அப்’பில் அவர் அவ்வாறு பேசிய பேச்சு ஒளிபரப்புவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். இது மார்க்சிய தத்துவத்துக்கு எதிரானது என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. தேர்தலில் தோற்கலாம் - சித்தாந்தத்தில் தோற்கக் கூடாதே!
இது பொதுவாக இளைஞர்களை, ஏன் சி.பி.எம்.மில் உள்ள இளைஞர்களைக்கூடத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லுவதாகும். புரட்சிக்கர இளைஞர்களாக வார்த்து எடுப்பதற்குப் பதில் புராணச் சகதியில் அவர்களைத் தள்ளிவிடக் கூடாது.“மதுவை ஒழிக்க மதுவை அருந்துவோம்“ என்பது போன்றது இது.
மதம் ‘அபின்’ என்றார் மார்க்ஸ். வடக்கே ராம பக்தி அதிகம் - அதற்காக ராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கப் போகிறோமா? மத விழாக்களை நாம் கையில் எடுத்துக் கொள்வது என்றால் தேரின் வடம் பிடிக்க வேண்டுமா? காவடி எடுக்கப் போகிறோமா? சைவக் கோயில்களுக்குச் சென்றால் திருநீறு பூசிக் கொள்ள வேண்டுமே! வைணவக் கோயில் திருவிழா என்றால் நாமம் தரித்துக் கொள்ளப் போகிறோமா?
பண்பாட்டை மீட்பது என்றால் கோயில் திருவிழாக்களை நாம் நம் கையில் எடுத்துக் கொள்ளும் வழி - பகுத்தறிவைச் சார்ந்ததாக இருக்க முடியாது. அந்தப் பண்பாடு எது? ஜாதியைத் தாங்கிப் பிடிப்பதுதானே!
அப்படியே கம்யூனிஸ்டுகள் முயன்றாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. வீண் பழிதான் வந்து சேரும். கம்யூனிஸ்டுகளே எங்கள் வழிக்கு வந்து விட்டார்கள்’ என்று சங்பரிவார் சக்திகள் பிரச்சாரம் செய்யவும், அதன் மூலம் அவர்கள் பலனடையவும்தான் பயன்படும்.
எதிர்க்க வேண்டிய மூடநம்பிக்கைகளை, மதவாத பிற்போக்குச் சக்திகளை கம்பீரமாக, வீரியமாக, பகுத்தறிவோடு, விஞ்ஞான சிந்தனையோடு எதிர்த்து முறியடிக்க வேண்டுமே தவிர, பிற்போக்குச் சக்திகள் ஏதோ ஒரு வகையில் வளர்ந்து விடக் காரணமாகி விடக் கூடாது.
இது சாதாரண அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. காலா காலத்திற்கும் பதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய சித்தாந்த ரீதியான பிரச்சினை. உரிமையோடும், தோழமையோடும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்என குறிப்பிட்டுள்ளார் வீரமணி.