
கேரளாவின் சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் 14 ஆம் தேதி அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் F-35B போர் விமானம் மூன்று வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. F-35 ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானம் நேட்டோ அல்லாத நாட்டில் தரையிறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் விமானப்படை மற்றும் கடற்படை பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றுள்ள தருணத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய போர் விமானங்கள் நாடுகளின் ராணுவ வலிமையை தீர்மானிக்கின்றன. அத்தகைய ஒரு சிறந்த போர் விமானம் தான் F-35B Lightning II. இது ஒரு 5ம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம், மற்றும் குறுகிய தூர புறப்பாடு மற்றும் நெடுக்குத்தன்மை கொண்ட தரையிறக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. F-35B விமானம் அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. . ரேடாரின் கண்ணுக்கும் புலப்படாத மேம்பட்ட போர்விமானம் என்று கூறப்படும் இந்தப் போர் விமானம், பிரிட்டன் ராயல் கடற்படைக்குச் சொந்தமானது.
அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அதில் இருந்து புறப்பட்ட F-35B போர் விமானம், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, இந்திய விமானப்படையின் உதவியுடன் கடந்த 14ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு எரிபொருள் நிரப்பினாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பறக்க முடியவில்லை.
சிறப்பு உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் வந்த பிறகுதான் விமானம் ஏர் இந்தியாவின் நிறுத்துமிடத்துக்கு மாற்றப் பட்டுள்ளது. உண்மை என்ன என்றால், ஒருங்கிணைந்த விமானக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (IACCS) தரையிறங்கும் அனுமதி வழங்குவதற்கு முன்பே, F-35B போர் விமானத்தைக் கண்டறிந்து, இந்தியா இடை மறுத்துள்ளது.
இந்திய விமானப்படை F-35B போர் விமானத்தின் பாதுகாப்பான தரை இறக்கத்தை எளிதாக்கியுள்ளது. தளவாட மற்றும் எரிபொருள் நிரப்பும் உதவிகளையும் இந்திய விமானப்படை செய்துள்ளது. இதனால், F-35B போர் விமானத்தின் உணர்திறன் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து, கடுமையான விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.மேலும், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும், F -35B போர் விமானத்தின் stealth coating, sensor suites, and data systems பாதுகாப்பானதா என்பது குறித்த கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன.
ரூ.640 கோடி மதிப்புள்ள போர் விமானம், கடந்த மூன்று வாரங்களாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சரி செய்ய பிரிட்டிஷ் கடற்படை பொறியாளர்கள் முயன்றாலும் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து 25 நிபுணர்கள் கொண்ட குழு அட்லஸ் இசட்.எம்.417 ரக விமானத்தில் திருவனந்தபுரம் விமானநிலையம் வந்தனர். இந்தக் குழுவினர் போர் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தனர்.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர் இந்தியா விமானங்கள் நிறுத்தும் பகுதிக்கு நகர்த்தி வைக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பிரிட்டீஷ் கடற்படை மறுப்பு தெரிவித்தது. தற்போது, அதற்கு ஒப்புக் கொண்டதால், 22 நாட்களுக்குப் பிறகு, F-35B போர் விமானம், பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டது. F-35B போர் விமானத்தின் கோளாறை இந்தியாவிலேயே சரி செய்ய முடியுமா என்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அப்படி முடியாவிட்டால், F-35B போர் விமானத்தை பகுதி பகுதியாக பிரித்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, உலகில் எந்த ரேடாராலும் இடைமறிக்க முடியாது என்று அமெரிக்கா கூறிவந்த F-35 போர் விமானத்தை, இடைமறித்து இந்தியா தனது சக்தியை நிரூபித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை போர்விமானத்தின் தொழில் நுட்பத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. கூடுதலாக, மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்ப மேலாதிக்கத்தின் மீதான நம்பிக்கையை இந்தியா உலுக்கியுள்ளது.