
நிகிதா சாதாரண ஆள் இல்லீங்க... அரசு வேலை வாங்கித் தர்றேன்னு சொல்லி, பல பேருகிட்ட பல கோடி ரூபாயை மோசடி செஞ்சவர். அவரால இப்ப ஒரு உசுரும் போயிருச்சு...’’ என்று ஆவேசப்படுகிறார்கள், திருமங்கலம் வட்டாரத்தில் நிகிதாவைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்!
‘தன்னுடைய ஒன்பதரை பவுன் நகையைக் காணவில்லை’ என திருப்புவனம் போலீஸில் நிகிதா புகார் கொடுத்த நிலையில், `விசாரணை’ என்ற பெயரில் தனிப்படை போலீஸார் செய்த சித்ரவதைகளால் பரிதாபமாக உயிரிழந்தார் அஜித்குமார். இந்தச் சம்பவம் நாடு முழுக்கக் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நிகிதா, அவரின் குடும்பத்தினர்மீதான மோசடிப் புகார்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
ஊர் மக்களிடம் நிகிதா பற்றி விசாரித்தபோது, “நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள் சப்-கலெக்டராகப் பணியாற்றியவர். அதனால், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உயரதிகாரிகள் பலரும் பழக்கம். ஜெயபெருமாளின் மறைவுக்குப் பிறகு அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஜெயபெருமாளின் குடும்பத்தினர் பல்வேறு காரியங்களைச் சாதித்துக்கொண்டதோடு, மோசடி வேலைகளிலும் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக, ஆலம்பட்டியிலுள்ள தங்கள் வீட்டை விற்பனை செய்யப்போவதாகக் கூறி ஒருவரிடம் ரூ.25 லட்சத்தை ஏமாற்றிவிட்டனர்.
செக்கானூரணியைச் சேர்ந்த ஒருவரிடம் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 25 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டனர். இதே பாணியில் விருதுநகர், ராமநாதபுரம், கரூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அரசு வேலை வாங்கித்தருவதாகப் பலரிடமும் பணம் வசூல் செய்து, பல கோடி ரூபாயை ஏமாற்றியிருக்கின்றனர். நிகிதாவின் தம்பி கவியரசு, அக்காவின் மோசடிகளுக்குத் துணையாக எப்போதும் அடியாட்களுடன்தான் வலம்வருவார். திண்டுக்கல்லிலுள்ள ஒரு அரசுக் கல்லூரியில் நிகிதா வேலை பார்த்தாலும், சரிவர வேலைக்குச் செல்வதில்லை. நிகிதாவின் நடவடிக்கை பிடிக்காமல் அரசியல் புள்ளியான முதல் கணவர் விவாகரத்து செய்துவிட்டார். இரண்டாவது கணவரும் நிகிதாவுடன் வாழாமல் பிரிந்துவிட்டார். எனவே, தாயார் சிவகாமியுடன் ஆலம்பட்டி வீட்டில் வசித்துவருகிறார்” என்றனர்.
2011-ம் ஆண்டு, பச்சக்கோப்பன்பட்டியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் திருமங்கலம் காவல் நிலையத்தில், ‘தன் மகனுக்கும், உறவினருக்கும் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 16 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட நிகிதா குடும்பத்தினர், ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகி விட்டனர்’ என்று புகார் கொடுத்திருக்கிறார் பாதிக்கப்பட்ட மற்றொரு நபரான தெய்வம், “2010-ம் ஆண்டு வேலை வாங்கித்தருவதாக என்னிடம் 9 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்ற நிகிதா குடும்பத்தினர், என்னை ஏமாற்றியதோடு, மிரட்டவும் செய்தார்கள். அவர்களால், இன்று சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறேன்” என்றார்.
தென்னிந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சித் தலைவரான திருமாறன் ஜி பேசும்போது, “21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதாவின் திருமண மோசடியில் நானும் பாதிக்கப்பட்டேன். திருமணம் செய்துவிட்டு, பின்னர் வரதட்சணை மோசடிப் புகார் கொடுத்து வழக்கு தொடுத்து 10 லட்சம், 20 லட்சம் என மிரட்டிப் பணம் பறிப்பதுதான் நிகிதாவுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வேலை. நிகிதாவின் அப்பாவிடம் நான் 10 லட்சம் ரூபாய் கொடுத்த பிறகுதான், எனக்கே டைவர்ஸ் கொடுத்தார்கள். எனவே, அஜித்குமார் மீது நிகிதா கொடுத்திருக்கும் புகாரும்கூட பொய்யானதாகத்தான் இருக்கும். இவரெல்லாம் நகையைத் தொலைக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்த வழக்கில் நிகிதாவைத்தான் முதல் குற்றவாளியாகவே சேர்க்க வேண்டும்” என்றார்.
நிகிதா குடும்பத்தினரின் செல்வாக்கு குறித்துப் பேசுகிற விவரப்புள்ளிகள், “சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில், கடந்தகாலங்களில் பணியாற்றிய கலெக்டர், எஸ்.பி-க்களோடு நிகிதா ஏற்படுத்திக்கொண்ட பழக்கம்தான், இன்று திருட்டுப் புகாருக்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியே அழுத்தம் கொடுக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. சிவகங்கையில் கலெக்டராகப் பணியாற்றிய இரண்டெழுத்து அதிகாரி, தற்போது அரசுப் பணியில் இருக்கிறார். அவர் மூலம் சென்னையிலுள்ள ஏ.டி.ஜி.பி ஒருவரிடம் பேசி, அவர் சிவகங்கை எஸ்.பி-க்கு உத்தரவிட்டதில்தான் அஜித்குமார் மரணம் நிகழ்ந்திருக்கிறது” என்றனர்.