24 special

அமெரிக்கன் பிரிடேட்டரை புறந்தள்ளும் இந்தியா..? இஸ்ரேலுடன் கைகோர்ப்பு..?

Modi
Modi

புதுதில்லி : இந்திய பாதுகாப்புப்படைகளை மேலும் வலிமைப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் 30 பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்க 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மத்திய அரசு போட்டிருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் தற்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலின் நீண்டதூர ஆயுத UAVயை வாங்க பரிசீலித்து வருகிறது.


இதுகுறித்து மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் "அமெரிக்காவுடனான ஒப்பந்தம் முன்னோக்கி நகரவில்லை. ஏறக்குறைய இறக்குமதி தொடர்பான அத்தனை செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நாங்கள் இப்போது இஸ்ரேலிய பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளர் மற்றும் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ள ஆயுதமேந்திய UAV ட்ரோன்களை பரிசீலித்து வருகிறோம். 

இந்த திட்டத்தை முதலில் பாதுகாப்புப்படைகள் பரிசீலித்த பிறகே அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட உள்ளது. தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் கலந்தாலோசிக்கப்படும். மேலும் இந்த திட்டம் மேக் இன் இந்தியா திட்டத்தின் வரைமுறைகளின் படி இருக்கும்" என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

ஆரம்பகால திட்டத்தின்படி அமெரிக்க ஏவுகணைகள் உட்பட தாக்கும் திறன் உடைய 30 அமெரிக்கன் பிரிடேட்டர்களை வாங்க திட்டமிட்டிருந்தது. அவை மூன்று கட்டங்களாக விநியோகிக்கப்படவேண்டும் எனவும்  திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி இறக்குமதி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களும் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவால் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களிற்கு வாய்ப்பு செல்வதால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் பெருகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமும் இந்த திட்டத்தில் கைகோர்க்க சம்மதம் தெரிவித்துள்ளதால் இந்த UAV ஆயுதமேந்திய ட்ரோன் விரைவில் இந்தியாவிலேயே தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது.