ஜம்மு காஷ்மீர் : ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை நடத்தப்பட்ட என்கவுண்டரில் 125 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 82 வெளிநாட்டு தீவிரவாதிகள் உட்பட 141 பேர் யூனியன் பிரதேசத்தில் பதுங்கி செயல்பட்டுவருவதாக உளவுத்துறை பகீர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியுள்ளபடி மொத்தமுள்ள 141 தீவிரவாதிகளில் 59 பேர் உள்ளூர் வாசிகள் எனவும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசத்துரோக செயலில் ஈடுபட்டு வருபவர்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முக்கிய பாதுகாப்புப்படைகள் வசம் உள்ள தகவலின்படி 2022 ஜனவரி முதல் ஜூலை 5 வரை 34 வெளிநாட்டு தீவிரவாதிகள் உட்பட 125 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தற்போது செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 6 வெளிநாட்டு பயங்கரவாதிகளும் 28 உள்ளூர் பயங்கரவாதிகள் உட்பட அதிகபட்சமாக 34 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜனவரி மாதம் 20 தீவிரவாதிகளும் பிப்ரவரியில் 7 பயங்கரவாதிகளும் மார்ச் 13, ஏப்ரல் 24, மே 27 என பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஜூன் 28 வரை இயக்கங்களில் கொல்லப்பட்ட பட்டியலும் வெளியாகியுள்ளது.
இந்திய பாதுகாப்பு படையினரால் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த 68 பேரும், ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த 29பேரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த 16 பேரும் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2021 ல் புதிதாக 142 பேர் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்துள்ளனர்.
இந்த 2022 ஜூலை 5 வரை தீவிரவாத இயக்கங்களில் 69பேர் இணைந்துள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் உளவுத்துறை பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு தீவிரவாதிகள் 82 பேருடன் மொத்தமாக 141 பேர் தற்போது மாநிலத்தில் செயல்பட்டுவருவதாக உளவுத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதைத்தொடர்ந்து ஜம்மு காஸ்மீர் பகுதியில் பாதுகாப்புப்படையினர் உச்சகட்ட உஷார் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜம்மு காஷ்மீரில் நுழைய 200க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் எல்லைக்கு அப்பால் பதுங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன