வாரணாசி : கடந்த காலங்களில் இல்லாத மரபாக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் இஃப்த்தார் நோன்பு திறக்கப்பட்டது தற்போது போராட்டத்திற்கு வழிவகைசெய்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஹிந்து பனாரஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் சுதிர் கே ஜெயினும் கலந்துகொண்டார்.
இதனிடையே இதுகுறித்து தகவலறிந்த மற்றொரு பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கண்டித்து நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துணைவேந்தரின் கொடும்பாவியை எரித்ததுடன் அவர் மன்னிப்பு கோரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.
மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில் " பனாரஸ் இந்து பலக்லைக்கழகத்தில் இதுவரை இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதில்லை. குறிப்பிட்ட பிரிவினரை திருப்திப்படுத்த நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கண்டிக்கத்தக்கது.
பல்கலைக்கழக செலவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய துணைவேந்தர் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரையில் போராட்டம் தொடரும்" எனத்தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக தரப்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்கலைக்கழகத்தின் நோக்கம் அனைத்து தரப்பு மாணவர்களையும் அரவணைத்து செல்வதே எங்களது நோக்கம். இந்நிகழ்ச்சியை துணைவேந்தர் ஒருங்கிணைக்கவில்லை.
மாணவர்கள் ஒருங்கணைத்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் கலந்துகொண்டார். இஃப்தாருக்கு எதிர்ப்பு தெரிவித்தது போராட்டம் நடத்துவது பல்கலைக்கழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் ஆகும். ஆகவே மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு வகுப்பறைகளுக்கு செல்லவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.