24 special

பிஜேபியை குறிவைக்கிறதா தெலுங்கானா அரசு..!?


தெலுங்கானா : இஸ்லாமிய மக்களால் இறைத்தூதர் என அழைக்கப்படும் நபிகளை பற்றிய கருத்துக்கூறி பிஜேபி தலைவர் ஒருவர் கிளப்பிய சர்ச்சை ஓயாத நிலையில் மீண்டும் ஒரு பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட மதப்பிரிவினரை பற்றிப்பேசியதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


தெலுங்கானா மாநிலம் கோஷாமால் தொகுதி பிஜேபி எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜாசிங். இவர் பேசியதாக கூறப்படும் வீடியோவில் சிறுபான்மையின சமூகத்தின் மதநம்பிக்கைகளை புண்படுத்தும்விதமாகவும் கண்ணியமற்ற முறையிலும் கருத்து கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பார்த்த முகம்மது அலி என்பவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில் " சட்டமன்ற உறுப்பினரான ராஜா சிங் எனது சமூகத்தின் நம்பிக்கைகளை புண்படுத்தும்விதமாக பேசியுள்ளார். அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என தைல குறிப்பிட்டுள்ளார். அலியின் புகாரின் அடிப்படையில் கஞ்சன்பாக் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ராஜாசிங் மீது 295ஏ சட்டப்பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பேசிய கஞ்சன்பாக் காவல்துறையினர் " நாங்கள் இந்த விஷயத்தை மிக உன்னிப்பாக கவனித்துவருகிறோம். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வீடியோவில் தேதியோ நேரமோ குறிப்பிடப்படவில்லை.

அதனால் அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பெறுகிறது" என கஞ்சன்பாக்  உமா மஹேஸ்வர் ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் ராஜாசிங் ஏற்கனவே சர்ச்சைகளுக்கு பெயர்பெற்றவர். ராஜாசிங் மீது 2017ல் ஹைதராபாத் காவல்துறையால் வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.