24 special

சென்னையில் ஒலிம்பியாட் போட்டிகள்..! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!


புதுதில்லி : ஊனமுற்றோருக்கான ஒலிம்பியாட் 44 ஆவது செஸ் போட்டிகள் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில்  நடைபெற இருந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்து போராக உருமாறியது. அதனால் போட்டிகள் வேறுநாடுகளுக்கு மாற்றப்படலாம் என கருத்து நிலவிய நிலையில் அகில இந்திய செஸ் சம்மேளனம் (AICF) சென்னையில் போட்டிகளை நடத்த முன்வந்தது.


அதன்படி ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னையில் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் AICF செயலாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற பாரத் சிங் சௌஹானின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி போட்டிவேட்பாளரான ரவீந்திர டோங்க்ரே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "2021 ஜனவரியில் நடந்த தேர்தலில் சௌஹான் பெற்ற 64 வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு கூட பெரும்பான்மையை பெறவில்லை.

அதனால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கவேண்டும்" என அந்த மனுவில் டோங்க்ரே குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அனிருத்தா போஸ் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு நேற்று வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜூன் 2 அன்று டெல்லி நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை விதித்தனர்.

மேலும் " எங்களுக்கு தேசத்தின் மாண்பே முதன்மையானது. இந்தியாவில் மதிப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எந்த ஒரு விதத்திலும் பாதிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. AICF செயலாளராக சௌஹான் தொடர நாங்கள் வழிமொழிகிறோம். இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. இந்த போட்டியை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளதால் இன்னும் சிறப்பை பெற்றுள்ளது" என தீர்பளித்ததோடு சௌஹானை தற்காலிகமாக தொடர் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டோங்க்ரே தரப்பு வழக்கறிஞரான மணீஷ் கூறுகையில் " சௌஹான் AICFல் தனது பதவிக்காலத்தில் சட்டவிரோதமாக டெண்டர்கள் வழங்கி பல முறைகேடுகள் செய்துள்ளார். ஒரே வருடத்தில் பல மோசடிகள் செய்துள்ளார். அமலாக்கத்துறையின் பார்வையில் அவர் இருக்கிறார். அவரை செயலாளராக மீண்டும் நியமிப்பது  ஏற்புடையதல்ல" என கூறினார்.