உத்திரகாண்ட் : பிஜேபி ஆளும் மாநிலங்களில் பகவத்கீதை மகாபாரதம் இராமாயணம் போன்ற பழம்பெரும் இதிகாசங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் அந்தந்த மாநில அரசுகள் முனைப்புக்காட்டி வருகின்றன. மேலும் ராணுவ பயிற்சிப்பள்ளியில் பகவத்கீதை மற்றும் இராமாயணம் பாடத்திட்டத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் முதல்வாரத்தில் கர்நாடகாவின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிசி.நாகேஷ் "நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகளில் தார்மீக அறிவியலின் ஒரு பகுதியாக பகவத்கீதை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். கீதை வாழ்க்கைக்கு தேவையான மதிப்பீடுகள் குறித்து பேசும் ஒரு இதிகாசமாகும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல குஜராத் மாநில பிஜேபி அரசு கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் 2022-23 கல்வியாண்டு முதல் ஆறு முதல் 12 வரையிலான வகுப்புகள் வரை பகவத்கீதை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கும் என அறிவித்திருந்தது,
மேலும் கல்வி அமைச்சர் ஜிது வஹானி செய்தியாளர்களிடம் "ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சர்வாங்கி சிஷன் பாடப்புத்தகத்தில் வேதம் அறிமுகப்படுத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை முதல்மொழி பாடப்புத்தகத்தில் கதை சொல்லும் வடிவில் அறிமுகப்படுத்தப்படும்" என கூறினார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானும் "பகவத்கீதை ஒரு அருமையான வேதம். அதை சிறுவயதிலிருந்தே படித்திருக்கிறேன்.
மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் பகவத்கீதையை கற்பிப்பதது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது" என கூறியுள்ளார். இதே வழியில் தற்போது உத்திரகாண்ட் கல்விதுறையமைச்சர் தன்சிங் ராவத் "தேசிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்திய முதல்மாநிலம் உத்திரகாண்ட். பள்ளிகளில் கீதையை கற்பிப்பது மட்டுமன்றி உத்திரகாண்ட் வரலாறும் கற்பிக்கப்பட உள்ளது.
பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று கல்வியாளர்களின் வழிகாட்டுதலுக்கு பிறகு வேதங்கள், கீதை,இராமாயணம் மாநில வரலாறு உள்ளிட்டவற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்போம்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கல்வித்துறையை காவிமயமாக்க பிஜேபி முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.