24 special

தந்தை 36 வருடத்தில் செய்ததை 6 வருடத்தில் அடைய போகிறாரா மகன் உதயநிதி !! அரசல் புரசலாக கசியும் துணை முதல்வர் ஸ்கெட்ச்!!

mkstalin ,udhayanithi
mkstalin ,udhayanithi

உதயநிதியை துணை முதல்வராக பட்டாபிஷேகம் செய்ய திமுக பெரும் திட்டம் ஒன்றை வைத்து இருப்பதாக தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.


உதயநிதி தன்னுடைய ஆரம்ப காலத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தை நிறுவி பல முன்னணி நடிகர்களின் படத்தை வெளியிட்டார். அப்பொழுதும் அதற்குப் பின்பு அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பொழுதும் அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று உதயநிதியே கூறி இருந்தார்.

பிறகு 2016 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் திமுகவில் ஒரு வேட்பாளருக்காக திருவெறும்பூர் தொகுதியில் உதயநிதி பிரச்சாரம் செய்தார். அவ்வப்போது அரசியல் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.பிறகு ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கையில் இருந்தது தமிழக அரசியல், அந்த சூழ்நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் உதயநிதி ஸ்டாலின் தீவிரமான அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  

அதே ஆண்டில் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இது முன்பு மு க ஸ்டாலின் வகித்திருந்த பதவியாகும். இதன் காரணமாகத்தான் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். 2021 சட்டசபை தேர்தலில் திமுகவின் சார்பாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி உதயநிதிக்கு வழங்கப்பட்டது. நூறு சதவீதம் வெற்றி பெற வாய்ப்பு உள்ள தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்பட்டார், பிறகு வெற்றியும் அடைந்தார்.

ஆனால் இவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. எம்எல்ஏவாக இருந்த உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று மற்ற அமைச்சர்களான அன்பில் மகேஷ், சேகர்பாபு, நாசர் போன்றவர்கள் அனைத்து மேடைகளிலும் மற்றும் கட்சிக் கூட்டங்களிலும் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பதவி டிசம்பர் 14 2022ல் வழங்கப்பட்டது.  இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதத்தின் பொழுது திமுகவை சேர்ந்த பெரம்பலூர் எம்எல்ஏவான பிரபாகரன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்கு காலம் கனிந்து விட்டது நமது முதல்வருக்கு மனம் கனிய வேண்டும் என்று தனது கன்னிப் பேச்சை எடுத்துக்காட்டி.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்று பல பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்ற வண்ணம் உள்ளார், அவரது உன்னதமான உழைப்பு பொதுமக்களிடம் அவர் நடந்து கொள்ளும் அணுகுமுறை அவர் செயலாற்றும் முறை ஆகியவை ஓரிரு துறைகளோடு நின்று விடக்கூடாது, நமது நம்பர் ஒன் முதல்வர் தலைமையின் கீழ் அவருக்கு துணையாக நின்று அனைத்து துறைகளிலும் செயல்பட வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்று உள்நோக்கத்துடன் உதயநிதியை துணை முதல்வர் ஆக வேண்டும் என்ற மறைமுக கோரிக்கையையும் சட்டப்பேரவையில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் எடுத்து வைத்துள்ளார். 

இதன் பின்னணியில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஏனென்றால் முதல்வர் ஸ்டாலின் இருக்கும் உடல் நிலையில் 40 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று வாக்கு சேகரிக்க முடியாத நிலையில் தனது மகனை துணை முதல்வராக மாற்றினால் தன் சார்பாக அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய வைக்கலாம் எனவும்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பேரனுக்கு பட்டாபிஷேகம் செய்தால் அது சென்டிமெண்டாக நன்றாக இருக்கும் எனவும், மேலும் திமுக ஆட்சியில் இருக்கும்போதே உதயநிதிக்கு திமுகவின் அதிகாரம் கைக்கு வரவேண்டும் அப்பொழுதுதான் உட்கட்சி மோதல் குடும்ப சண்டை இருக்காது எனவும் பல்வேறு அரசியல் கணக்குகளுடன் முதல்வர் ஸ்டாலின் குடும்பம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வரும் ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள் வர இருப்பதால் அன்றைக்கு உதயநிதி துணை முதல்வர் பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஆனால் இது பற்றிய அதிகார பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.