ஒடிசா : இந்திய மக்களவையின் 17 ஆவது சபாநாயகராக பதவி வகிப்பவர் ஓம் பிர்லா. இவர் 2003 ராஜஸ்தான் கோட்டா தொகுதியில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் கட்சியில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். பிரதமர் மோடியின் ஆசிர்வாதத்தால் ஜூன் 2019ல் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டத்தில் போலீசாரால் நடத்தப்பட்ட சோதனையில் 19641 சிம்கார்டுகள் 14 லட்சம் ரொக்கம் மற்றும் 48 செல்போன்கள் மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பெயரில் வாட்ஸப் கணக்கை தொடங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து மாநில சைபர் க்ரைம் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இதுதொடர்பாக மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சாய் பிரகாஷ் தாஸ் அவினாஷ் நாயக் மற்றும் துஷ்மந்தா சாஹு ஆகியோரை கைதுசெய்த போலீசார் அவர்களை ஐந்துநாட்கள் குற்றப்பிரிவு போலீசார் காவலில் வைத்துள்ளனர். விசாரணையில் தென்கனலில் பி.எஸ்.என்.எல் எண்ணை பயன்படுத்தி சிம் இயக்கட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த போலி சிம்கார்டு குற்றச்செயலில் மூளையாக செயலபட்டது சாய் பிரகாஷ் மற்றும் பி.எஸ்.என்.எல் டீலர் அவினாஷ் மற்றும் அவரது ஊழியர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. துஷ்மந்த் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் ஏழு வங்கிக்கணக்குகள் மற்றும் மூன்று பேடிஎம் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதை விசாரணையில் போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த கணக்குகளை வைத்து முப்பது லட்சத்திற்கும் மேலாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேசிய குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் ஜெனெரல் சஞ்சிப் பாண்டா " குற்றப்பிரிவு சைபர் டீம் தென்கனலில் இருந்து 1900த்திற்கும் மேற்பட்ட போலி சிம்களை கண்டறிந்துள்ளது. இதுதொடர்பாக மூன்று தொலைத்தொடர்பு சேவை நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பெயரில் வாட்சப் கணக்கு தொடங்கப்பட்ட பின்னரே இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.