அரசியல் வாதிகள் எது செய்தாலும் அதில் அரசியல் இருக்கும் என்பார்கள் அந்த வகையில் தற்போது அண்ணாமலை எந்த நிகழ்வாக இருந்தாலும் ஆளும் கட்சி நிர்வாகத்தை போட்டி புரட்டி எடுத்து வருகிறார், ஊழல் குற்றசாட்டுகள் தொடங்கி சட்டம் ஒழுங்கு வரை வெளுத்து எடுத்துவரும் அண்ணாமலை இலவச நீர் மோர் பந்தல் அமைப்பதிலும் உதய சூரியனை இழுத்து விட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-உதய சூரியனின் உக்கிரம் குறைக்க... தாமரைக்கு குளிர்ச்சியாக தந்திடுவோம் நீர் மோர் !பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம்.
அன்பானவர்களே, கொதிக்கும் கோடைக்காலம் தொடங்கி விட்டது. உதய சூரியனின் உக்கிரம் தாங்காமல் தமிழக மக்கள் எல்லாம் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கெல்லாம் தாமரைக் குளிர்ச்சியைத் தந்து உதவும் விதமாக தண்ணீர்ப் பந்தலை பா.ஜ.க மாநிலத் தலைமை அலுவலகம் கமலாலயத்தில் இன்று தொடங்கி வைத்தேன்.
பகல் வேளையில் பாதசாரிகளுக்கு இந்தத் தண்ணீர்ப் பந்தல் பேருதவியாக இருக்கிறது. மக்களுக்கு நேரடியாகப் பயன்படும் வகையில் இதுபோன்ற தண்ணீர்ப் பந்தலை நாம் தமிழகமெங்கும் அமைத்து வெப்பத்தின் தாக்கம் குறைக்க ஒவ்வொருவரும் அவர்கள் பகுதியில் உதவிகள் செய்யலாமே!
‘சப் கே சாத் சப்கா விகாஸ்’ இதுதானே நம் கட்சியின் தாரக மந்திரம்! கொரோனா (covid-19) பேரிடர் காலத்தில், மக்களுக்குச் செய்த நேரடி உதவிகள், அவர்களை நமது கட்சி நெருங்கிச் செல்ல வாய்ப்பாக அமைந்தது. மக்களும் உரிமையுடன் நாம் கண்டிப்பாக உதவிகள் செய்வோம் என்ற நம்பிக்கையுடன் நம்மை நாடி வந்தார்கள்.
அதுபோல, இந்த நீர் -மோர்ப் பந்தல் அமைக்கும் நற்பணியையும் நாம் விரிவாக மேற்கொள்ள வேண்டும். இன்னும் அகலாது இருக்கும் covid-19 நோய்த்தொற்றை மனதில் வைத்து மத்திய மாநில அரசுகளின் பாதுகாப்பு வழிகாட்டு விதிமுறைகள் எல்லாம் கருத்தில் வைத்து சுகாதார முறைப்படி இந்த தண்ணீர்ப் பந்தல் அமைக்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் உடல் நலத்தையும் சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு தூய்மையான முறையில் நீர்மோர் தயாரிக்கப்பட வேண்டும். பருகும் தண்ணீர் குப்பிகள், மறுமுறை பயன்படுத்தப்படாமல் ஒருமுறை பயன்படுத்துவது போல அமைந்திருத்தல் வேண்டும்.
இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்’ என்ற சீரிய பணியில் மாவட்டத்தின் நிர்வாகிகள், பல்வேறு நடவடிக்கைகளை, எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், தண்ணீர்ப் பந்தல் அமைப்பு, மக்களுடன் ஏற்படும் உறவுப் பாலத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும்...நன்றி வணக்கம்.அன்புச் சகோதரன் உங்க ‘‘அண்ணா’’ என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலையின் இந்த முகநூல் பதிவில் சென்று திமுகவினர் கொந்தளித்து வருகின்றனர் கோடை காலம் என்றால் போதாதா உதய சூரியனின் உக்கிரம் தாங்காமல் தமிழக மக்கள் தவித்து வருகிறார்கள் என்று சொல்லவேண்டுமா? என அவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர், வினோத் பூபதி என்ற முகநூல் பெயர் கொண்ட ஒருவர்.. எப்போது பார்த்தாலும் எங்கள் கட்சி மீது உங்களுக்கு அப்படி என்னதான் கோவம் சொல்லுங்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.இப்படி பல திமுகவினர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.