கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரத்தினம் ஆகிய இருவரும் தொடர்புடைய மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர் இவ்விருவரும் அரசு மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாகவும் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் முக்கிய புள்ளிகளின் ஆதரவுடன் மணல் வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவர்களாகவும் திகழ்ந்தனர். மேலும் கனிம வளம், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் இருவரின் கண் அசைவிற்கு செயல்படுவார்கள் என்றும் மாதாந்தோறும் அவர்களுக்கு மாமூல் செல்கிறது என்றும் இதனால் இவ்வதிகாரிகள் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை திண்டுக்கல் மாவட்டத்தில் ரத்தினத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை இட்டது.
இவர்களைத் தொடர்ந்து அரசு மணல் குவாரிகளில் ஒப்பந்தம் மேற்கொண்ட மற்ற சிலர்கள் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இப்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போலி கையெழுத்து இடப்பட்டுள்ளதும், மணல் குவாரிகளிலிருந்து மாதம் 300 கோடி ரூபாய்க்கு மணல் விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவலும் போலியான க்யூ ஆர் கோடுகள் என கருப்பு பணத்தின் புழக்கம் 60% இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து உறுதி செய்து செய்திகளில் தெரிவித்தனர். இந்த சோதனையில் கனிமவள துறையில் இருக்கும் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த முறை நடைபெற்ற ரெய்டு 34 இடங்களில் நடைபெற்றதும், அந்த ரெய்டில் ஆடிட்டர் சண்முகராஜ் வீடும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் இருந்ததும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது ஏனென்றால் ஆடிட்டர் சண்முகராஜ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமானவர் என்றும் திமுகவின் சில முக்கிய தலைவர்களுக்கு இவரே ஆடிட்டராக உள்ளார் என்ற செய்திகள் வெளியானதே பெரும் பரபரப்பிற்கு காரணம்! அதற்குப் பிறகு மணல் குவாரிகளில் அமலாக்க துறையின் ரெய்டு முடிந்தது! இப்படி ரெய்டு முடிந்து ஒரு வாரம் கூட முடியவில்லை அதற்குள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மணல் குவாரிகள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதாவது குவாரிகளில் எடுக்கப்பட்ட மண்ணின் அளவு குவாரியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணின் அளவும் சரியாக உள்ளதா அல்லது இதில் ஏதேனும் முறைகேடு உள்ளதா? குவாரி, யார்டு மற்றும் மணல் விற்பனை ஆகிய மூன்றும் ஒரே அளவை குறிக்கிறதா இதன் மூலம் அரசுக்கு எவ்வளவு தொகை செல்கிறது, கிடைக்கும் வருமானம் எவ்வளவு என அனைத்து கோணத்திலும் அதிகாரிகள் சோதனை இட்டு உள்ளனர். இந்த சோதனையின் முடிவிலும் போலி ரசீது வழங்கி மணல் விற்பனை செய்துள்ள சம்பவம் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இன்னும் எத்தனை நாட்கள் இந்த சோதனை தொடரும் என்பது அமலாக்கத் துறை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை அது மட்டும் இன்றி இந்த போலி ரசீது தொடர்பாக சில முக்கிய மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் கைது செய்யப்படலாம் என அமலாக்கத்துறை வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வருமானவரித்துறை திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் இறங்கி சோதனை மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் மணல் குவாரிகளில் இறங்கி சோதனை நடத்தி வருவது திமுக தலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்த முறை அமலாக்கத்துறை ஆளுந்தரப்பின் முக்கிய புள்ளி கைதை குறிவைத்து இறங்கியிருப்பதாகவும் வேறு சில தகவல்கள் கசிகின்றன.