கேரள மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் குண்டு வைத்த நபர் பேசிய வீடியோ மக்களிடம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலம் எர்ணாகுளம் அடுத்த கமளச்சேரியில் நேற்று கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டத்தில் 3 முறை குண்டுகள் வெடித்தன. இந்த திடீர் குண்டுவெடிப்பின் போது சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
அதில், இன்று காலையில் 13 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்போது வரை அந்த குண்டு வெடிப்பில் 3பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசி ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ்தீவிரவாதிகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில்கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பது குறித்து ஆலோசனை விரிவாக விவாதிக்கப்பட்டது.
Jehovah's Witnesses என்ற கிறிஸ்துவ பிரிவை சேர்ந்தவர்கள் ஜெப கூட்டத்தில் தாக்குதல் நடத்தினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் 2000 பேர் வரை கூடி இருந்தனர். வெடிகுண்டு படை, தடயவியல் குழு மற்றும் என்ஐஏ குழு ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என்பது உறுதியானது. அதே நேரத்தில் கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைதான நபர் டொமினிக் மார்ட்டின் குண்டு வைத்ததற்கான பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதாவது, யூடியூப் மூலமாக வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொண்டு கொச்சியில் மூலப் பொருட்களை வாங்கி ஐஇடி குண்டு தயாரித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். காலை 7.30 மணிக்கு குண்டு வைத்து விட்டு 9.30 மணிக்கு ரிமோட் மூலம் இயக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் பிராத்தனை கூட்டம் நடைபெற்ற இடத்தின் பின்புறம் இருந்தபடி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் குண்டு வெடித்த பின், திருச்சூருக்கு பயணம் செய்தபடியே முகநூலில் லைவ் வீடியோ போட்டதாகவும் டொமினிக் மார்ட்டின் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னதாக முகநூலில் லைவ் வீடியோவில் பேசும்போது, 16 வருடங்களாக நானும் இந்த அமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன். பூமியில் வாழ்கின்ற அனைவரும் அழிந்து போவார்கள் ஆனால் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் அழிந்து போக மாட்டார்கள் தொடர்ந்து வாழ்வார்கள் என்று போதிக்கின்றனர். இது போன்ற போதனைகள். பிரசாரங்கள் இந்த நாட்டில் தேவையில்லாதது என்பதால் குண்டு வைத்ததாக டொமினிக் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டை தன்னந்தனியாகத்தான் தயாரித்தேன்.எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. அந்த சபையின் செயல்பாடு பிடிக்கவில்லை என்பதால் 2 வருடமாக திட்டமிட்டு இதை செய்ததாக கூறியுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவர் மீது கேரளா மாநில காவல்துறை உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஆழ்த்தியுள்ளது.
கேரளா கமளசேரி ஜெபக்கூட்ட குண்டுவெடிப்பால் நாட்டின் அனைத்து மாநிலங்களின் போலீஸாரும் உஷார் நிலையில் உள்ளனர். குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லி, வர்த்தக தலைநகர் மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து டெல்லி, மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. கேரள குண்டுவெடிப்பால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலமடங்கை அதிகரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.