24 special

கடைசிவரை அந்த குழந்தைக்கு 5 "வயசுதான்" முதல்வரே... பங்கம் செய்த அண்ணாமலை..!

Stallin and annamalai
Stallin and annamalai

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள்தான் ஆகிறது 10 மாத குழந்தையிடம் அனைத்தையும் உடனே நிறைவேற்ற சொன்னால் எப்படி என கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார் அதில் வரும் ஆனா வராது என நக்கலாக குறிப்பிட்டுள்ளார் அவை பின்வருமாறு :-


வரும்… ஆனா வராது…சட்டசபையில் 110வது விதியின் கீழ் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை படித்திருக்கிறார் அதிலே சட்டசபையிலும் பொது வெளியிலும் தேர்தல் நேரத்தில் திமுக மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும் அவற்றை நிறைவேற்றுவது குறித்தும் சில விமர்சனங்கள் எதிர்க்கட்சியினரால் வைக்கப்படுகிறது, என்று படித்துள்ளார்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் தான் நிறைவேற்றியிருக்கிறது… ஆக…. 10 மாத குழந்தை இடம் 10ஆம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல இருக்கிறது இந்த கேள்விகள்? என்று நகைச்சுவை உணர்வுடன் வேறு குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் எந்த ஆட்சியும் 60 மாதங்களுக்கான ஆட்சிதான். இந்த ஆட்சி முழுமையாக நிறைவு பெற்றால் கூட அந்த ஆட்சிக் குழந்தைக்கு வயது ஐந்து ஆகத்தான் இருக்கும். அப்போதும் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டால் 5 வயது குழந்தையிடமா கேட்பீர்கள்?... என்று கேட்பார் போலும்.

திமுக தேர்தலில் அறிவித்த 505 வாக்குறுதிகளும், குறிப்பிட்ட காலவரைக்குள்ளாக நிறைவேற்றப்படும், என்று புதிய வாக்குறுதி..!!! கொடுத்துள்ளார்.கடந்த 10 மாதங்களில் மொத்தம் 208 தேர்தல் வாக்குறுதிகள் செயலுக்கு வந்துள்ளன இவை அனைத்தும் உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு செயல்படுவதை அரசு முனைப்புடன் கண்காணித்து வருகிறது என்றும் எழுதித் தந்ததை படித்துள்ளார்.

இதன் முழு அர்த்தம் என்னவென்றால், வாக்குறுதிகள் எல்லாம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை மாறாக அறிவிப்புக் கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, அந்த கோப்புகள் மெதுவாக அரசு மட்டத்தில் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கப் போகிறது, அப்படி நகர்வதை முதல்வரும் அமைச்சர்களும் முனைப்புடன் கண்காணித்து வரப்போகிறார்கள். அந்த கோப்புகளைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடையலாம்….என்பதே.

இதில் இன்னொரு கூடுதலான குழப்பம் என்னவென்றால், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி தமிழக முதல்வர் தன் உரையில் 378 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறியிருக்கிறார்.  கடந்த டிசம்பர் 21ஆம் தேதி முதல்வர் தன் உரையில் 300 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக கூறியிருக்கிறார். தற்போது மார்ச் மாதம் 23 அன்று, 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாகக்  கூறியிருக்கிறார்.

அதாவது… நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் செய்த பணிகள் நிறைவேற்றிய வாக்குறுதிகளின் எண்ணிக்கை கூடுமா? குறையுமா? அறிவாலயம் அறிவிப்பு ஆட்சியில் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாக, தேய்ந்து கொண்டே வருவதற்கான காரணம் அவருக்குத்தான் தெரியும். இதை அதிகம் யோசித்துப் பார்த்தால் மக்களுக்கு எல்லாம் இரத்தக் கொதிப்பும், குழப்பமும்தான் அதிகரிக்கும்.

நான் ஏற்கனவே சொல்வது போல, அறிவாலய திமுக ஆட்சி என்பது வெறும் அலங்கார அறிவிப்பு ஆட்சி தானே தவிர, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியையும் இவர்கள் எடுப்பதில்லை. மகளிருக்கான உரிமைத் தொகையை மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னவர் தற்போது அது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார் அதாவது மகளிரின் உரிமையை மறுத்துவிட்டார்.

கேட்டால் பத்து மாச குழந்தையிடம் இப்படிப் பேசலாமா என்று சொல்வார்கள். அதாவது ஆசை காட்டி ஏமாற்றும் வேலையை அரசு செய்தால் தப்பில்லை. பொன் நகை கடன் விஷயத்தில், வாங்க வாங்க கடன் வாங்குங்க வந்தவுடன் நாங்க தள்ளுபடி பண்றோமுங்க என்று ஏலம் போட்டார்கள்  அப்பாவி மக்கள் எல்லாம் தேவையே இல்லாமல் கடன் வாங்கி, ஆப்பசைத்து மாட்டி அல்லல்பட்டு கொண்டிருக்கும்போது.

மகளிருக்குத் தகுதி அடிப்படையில் தருவோம் என்று இன்னும் தரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சின்ன சந்தேகம் வேலைக்கு போக தகுதி வேண்டும் என்கிறார்கள். குடும்பத்தலைவிக்கு என்ன தகுதி ? அப்போது பணம் கிடைக்காத பெண்கள் தகுதி இல்லாத குடும்பத்தலைவிகளா?

இன்னம் சொல்லப்போனால் தாலிக்கு கொடுத்துக்கொண்டிருந்த தங்கத்தை நிறுத்திவிட்டார்கள். பெரும்பான்மையினரின் நம்பிக்கைக்கும் பக்திக்கும் பெருமைக்கும் எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் அறிவாலயம் அரசு, தாலிக்கு கொடுத்துக்கொண்டிருந்த தங்கத்தை தடை செய்து விட்டது. உண்மையான ஏழைத் தமிழர்கள், உணர்வுடன் கலந்த தாலிக்கு தங்கத்தை, நிறுத்தக் காரணம், சிறுபான்மையினர் அந்தத் திட்டத்தை பயன்படுத்த முடியாது என்பதாலும், பிற பெண்களுக்கு தாலி அறுப்பு போராட்டம் நடத்துவதாலும் என்று சிலர் கூறுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

இன்னும் கல்விக் கடன் ரத்து,  விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், என்று அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையும் காற்றோடு காற்றாக கரைந்து போயின... மக்களும் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

தன்னுடைய தோல்விகளை மறைப்பதற்காக, இப்போது முதல்வர் பயன்படுத்த தொடங்கி இருக்கும் பாதுகாப்பு கேடயம் அதிமுக. அதாவது, கடந்த ஆட்சியினர் 2016 தேர்தலில் தந்த வாக்குறுதிகள் என்னென்ன என்பதையும் அதில் எதை எதை நிறைவேற்றவில்லை என்பதையும் மிகுந்த பெருமிதத்துடன் அவர் பட்டியலிட்டிருக்கிறார்.

திமுக அரசின் செயலின்மையை, பின்னடைவை, கேள்வி கேட்கும் போது, நான் மட்டும் செயலற்று இருக்கவில்லை, எனக்கு முன்னரும் செயலற்றுத்தான் இருந்தார்கள், ஆகவே என்னை கேள்வி கேட்காதீர்கள் என்று கூறுவது போல இருக்கிறது, அவர் படித்த உரை.ஆனால் மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்களை ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் ஒன்றியங்களுக்கும் உற்சாகமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் காப்பீட்டு திட்டம், இலவச கேஸ் சிலிண்டர், மக்கள் மருந்தகம், பிரதமரின் இன்சூரன்ஸ் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், சுகாதாரத் திட்டம், கழிப்பறை திட்டம், குழாய் வழியில் குடிநீர் திட்டம், இலவச தடுப்பூசிகள், மருத்துவ பாதுகாப்புகள், என்று மத்திய அரசு தொடர்ச்சியாக மக்கள் நலத் திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது... மத்திய அரசின் பயனாளிகள் கூட்டம் மக்களே. மாநில அரசின் பயனாளிகள் ஆட்சியை சூழ்ந்து கொண்டிருக்கும் குழுக்களே.

அறிவாலயம் அரசு, மக்களையெல்லாம் மறந்துவிட்டு மத்திய அரசு திட்டங்களை  புதுப்புது பெயர்களை சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆட்சியின் சட்டம் ஒழுங்கும், ஒரு ஆட்சியின் பொதுவிநியோகத் திட்டமும், ஒரு ஆட்சியின் கல்விக்கான தொலைநோக்கும், ஒரு ஆட்சியின் மக்கள் நல்வாழ்வும், ஒரு ஆட்சியின் தொழில் வளர்ச்சியும் தான்... மக்களால் அளவிடப்படும்.

அந்த வகையில் தற்போது 20% ஆட்சிக் காலத்தை முடித்திருக்கும் இந்த அறிவாலைய அறிவிப்பு ஆட்சி மக்கள் மதிப்பீட்டில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே  விட்டுவிடுகிறேன் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.