வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சென்னை அருகே உள்ள வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் தற்போது சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது.
ஆனால் இதற்கு இடையே நடந்த சில தகவலை இப்போது பார்க்கலாம். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி எல்லையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிற்குள் சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது; அதே சமயத்தில் இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே 60 கிலோமீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விதிகள் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் இந்த விதிகளுக்கு மாறாக பல சுங்கச்சாவடிகள் 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியிலேயே இருக்கின்றது. இவற்றையெல்லாம் அரசு விரைந்து மூட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிடும்போது, இனி 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இயங்கும் மற்றவை அடுத்து வரும் மூன்று மாதங்களில் மூடப்படும் என உறுதி அளித்து இருந்தார். இது மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. அதே வேளையில் இப்படி ஒரு சமயத்தில் தான் சென்னையில் உள்ள சூரப்பட்டு, வானகரம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரும் என்று மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றது. இதன் மூலம் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது ஒரு பக்கம் சுங்கச்சாவடிகளை அகற்றம் என்றால், மறுபக்கம் சுங்கச்சாவடியில் அதனை சரிசெய்யும் விதமாக கட்டணம் உயர்வு என்பதை இங்கு விளக்குகிறது. இதற்கு முன்னதாக சென்னை மாநகர எல்லைக்குள் வரக்கூடிய பரனூர், சூரப்பட்டு, சென்னை சமுத்திரம், நெமிலி, வானகரம் ஆகிய சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழக அரசு வலியுறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சூரப்பட்டு வானகரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்பதும் கூடுதல் தகவல்.