
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் ஆளும் தி.மு.க., தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. தொகுதிவாரியாக நிர்வாகிகளை நேரடியாகச் சந்தித்துவரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஒரு சில மாவட்டச் செயலாளர்களையும் மாற்றிவருகிறார். அப்படி, தலைநகரில் ஒருவர் மாற்றப்படவிருந்த நிலையில், அவரின் தலை தப்பியிருப்பதுதான் சென்னை உடன்பிறப்புகள் மத்தியில் பரபர பேசுபொருளாகியிருக்கிறது!
கடந்த வாரம், கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த நா.கார்த்திக் மாற்றப்பட்டு, துரை.செந்தமிழ்ச்செல்வன் புதிய மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கிழக்கு - மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான அதே நாளில், ‘சென்னை மாவட்டச் செயலாளர் ஒருவரும் மாற்றப்படுவார்’ என்ற தகவல் கிசுகிசுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
“திருநெல்வேலி பிரிப்பு அறிவிப்புடன், சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகரை மாற்றவும் தலைமை தயாரானது. ஆர்.டி.சேகர் தீவிர உதயநிதியின் ஆதரவாளராக அறியப்படுபவர். இந்த விவகாரம் வெளியே போகவும், ஆர்.டி.சேகர் தரப்பு, துணை முதல்வரைத் தொடர்புகொண்டு பேசியது. உடனே மேலிடத்தைத் தொடர்புகொண்ட உதயநிதி, ‘ஆர்.டி.சேகரை மட்டும் இப்போ எதுக்கு மாத்தணும்... மாத்தணும்னு முடிவு செஞ்சீங்கன்னா மொத்த சென்னை மாவட்டத்தையும் பிரிச்சு மாத்திக்கோங்க’ என்று படபடத்திருக்கிறார். இதையடுத்தே ஆர்.டி.சேகரின் தலை தப்பியிருக்கிறது.
‘சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை அமைப்புரீதியாகப் பிரிக்க வேண்டும்’ என்று உதயநிதி தரப்பு கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறது. புதிதாக உருவாக்கப்படும் மாவட்டங்களில் தனக்கான ஆதரவாளர்களை நியமிக்கும் திட்டத்திலிருக்கும் உதய்க்கு, சென்னை, காஞ்சிபுரத்திலுள்ள பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துவிட்டனர்.
ஆனால், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் சேகர் பாபுதான் முதல்வரிடம், ‘தேர்தல் சமயத்தில் மாவட்டத்தைப் பிரிப்பது சரியாக இருக்காது தலைவரேஎனப் பேசி முட்டுக்கட்டை போட்டுவருகிறார். இது உதயநிதி தரப்புக்கு பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் மேயர் பதவியை துறந்துவிட்டு எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட மேயர் ப்ரியா விரும்புவது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். சமீபத்தில் உதயநிதியை அவர் சந்தித்தபோது, எம்.எல்.ஏ. சீட்டை ப்ரியாவுக்கு உறுதி படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக, சேகர்பாபுவின் ஆதரவாளரான தாயகம் கவி சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் திரு.வி.க தொகுதிதான் ப்ரியாவுக்காக ஒதுக்கப்படவிருக்கிறது., ப்ரியாவுக்காக பெரிய லாபி ஒன்று வேலை செய்து வருகிறது. சேகர்பாபுவின் சிஷ்யை என கூறப்ட்ட மேயர் ப்ரியா, கடந்த 1 வருடங்களாக அவரது கட்டுப்பாட்டில் இல்லை என் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் தனது ஆதரவாளரின் தொகுதியையே மேயர் ப்ரியா குறிவைப்பதும், உதயநிதியை சந்தித்ததும் அறிந்த சேகர்பாபு கோபமடைந்து, ப்ரியாவை தொடர்பு கொண்டு, எனக்குத் தெரியாமல் உதயாவை நீ சந்திப்பாயா? யார் உனக்கு பெர்மிசன் கொடுத்தது ? என்கிட்டே பெர்மிசன் வாங்கினியா? என்றெல்லாம் கடுமையாக பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகின.
இதனை தொடர்ந்து மேயர் பிரியா தரப்பு உதயநிதியிடம் புகாரை அளித்துள்ளது., உடனே சேகர்பாபுவை வரவழைத்த உதயநிதி, சென்னையிலுள்ள கட்சிக்காரங்க என்னை சந்திக்கனும்னா உங்க கிட்டே பெர்மிசன் வாங்கனுமா? அதுவும் அவங்க இந்த சிட்டியின் மேயர். அவர், என்னை சந்திக்க வருவதற்கு உங்களிடம் அனுமதி வாங்கனுமா? யார் போட்ட ரூல்ஸ் இது? இப்படித்தான் கட்சிக்காரர்களை மிரட்டி அடக்கி வெச்சிருக்கீங்களா? இதுதான் லாஸ்ட் வார்னிங் ''என்று செமயாக திட்டித்தீர்த்து அனுப்பி வைத்துள்ளார்
இந்த நிலையில், உதயநிதியின் ஆதரவாளரான ஆர்.டி.சேகரை மட்டும் நீக்குவதற்குக் காய்நகர்த்தவே, கடுப்பான உதய் `பிரிப்பதென்றால் மொத்தமாகப் பிரியுங்கள்’ என கூறியுள்ளார். `இப்போதைய நிலைமைக்கு மாற்றமும் வேண்டாம், பிரிக்கவும் வேண்டாம்’ என்று முடிவெடுத்த தலைமை, தலைநகர் விவகாரத்தை அப்படியே ஆறப்போட்டிருக்கிறது திமுக தரப்பு.