
கடந்த சில தினங்களாக வடக்கே காஷ்மீரிலிருந்து தொடங்கி பூடான், ஐரோப்பா, ரஷ்யா என பல தளங்களில் இந்தியா தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. பிரதமர் மோடியின் ராஜதந்திரங்கள் , தேசத்தின் பாதுகாப்பையும் பொருளாதார வலிமையையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.இந்தியா பெற்றிருக்கும் வெற்றிகள் தேசத்தின் ஒவ்வொரு இந்தியருக்கு பெருமையைத் தருகின்றன.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சமீபத்தில் மக்கள் தாமாகவே பாகிஸ்தானுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு இந்திய காஷ்மீரில் ஏற்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு, சாலை, எரிபொருள் விலை குறைவு உள்ளிட்ட முன்னேற்றங்களைப் பார்த்த அங்குள்ள மக்கள், “இந்தியாவுடன் இணைய வேண்டும், நல்வாழ்வு பெற வேண்டும்” என்ற முழக்கத்தையே எழுப்புகின்றனர்.
பாகிஸ்தான் அவர்களுக்கு தந்தது வறுமை, தீவிரவாதம், அழிவு, ஆனால் மோடி அரசு தந்தது வளர்ச்சியும் அமைதியும் என அவர்கள் உலக அரங்கில் வெளிப்படையாகக் கூறுகின்றனர். இதுவே ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்த பாகிஸ்தான் பிரதமருக்கும், அவருக்கு துணைநின்ற துருக்கி அதிபருக்கும், பின்னால் நின்ற அமெரிக்காவுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோவில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையப்போகிறது” என்ற கூற்றுக்கு இந்நிகழ்வுகள் நேரடி சான்றாகக் கருதப்படுகின்றன.
இதோடு மட்டுமல்லாமல், பூடானில் இந்தியா பெரும் வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் தாக்கத்தை தடுக்க, பூடானில் பல்லாயிரம் கோடிகள் செலவில் ரயில் பாதை அமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. கடல் இல்லாததால் வளர்ச்சியில் பின்தங்கியிருந்த பூடானுக்கு இது புதிய பொருளாதார வாயிலைத் திறக்கிறது. இதன் மூலம் இந்தியா-பூடான் உறவு வலுப்படும் நிலையில், சீனாவின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இது ஒருபுறம் என்றால் பொருளாதார தளத்திலும் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், இந்திய பொருட்கள் இனி ஐரோப்பா முழுவதும் தடையின்றி செல்லும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பிரிட்டனுடனும் இத்தகைய ஒப்பந்தம் இருந்தது. இதன் மூலம் வளைகுடா நாடுகள், ஆப்ரிக்கா, தென்னமெரிக்கா, கிழக்காசியா உள்ளிட்ட இடங்களிலும் இந்திய வியாபாரம் விரைவாக பரவி வருகிறது. அமெரிக்கா விதிக்கும் தடைகள், இந்தியாவை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மோடி அரசு கவனமாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்க தடையால் உலகளாவிய முன்னேற்றங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
பாதுகாப்புத் துறையில் ரஷ்யாவுடன் இந்தியா பெற்றிருக்கும் வெற்றியும் குறிப்பிடத்தக்கது. இந்தியா ஏற்கனவே பெற்றிருந்த எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் திறமையாகப் பயன்படுத்தியதால், மகிழ்ந்த ரஷ்யா மேலும் ஐந்து எஸ்-400 அமைப்புகளை வழங்க சம்மதித்துள்ளது. விரைவில் சீன எல்லையிலும் இவை நிறுவப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல், சீனாவுக்குக் கூட கிடைக்காத எஸ்-500 அமைப்பை இந்தியாவுடன் சேர்ந்து தயாரிக்க ரஷ்யா ஆலோசித்து வருகிறது. ரஷ்ய தொழில்நுட்பத்தை திருடும் சீனாவுக்கு இது வழங்கப்படாத நிலையில், நம்பகத்தன்மை மிக்க இந்தியாவுக்கு இந்த முன்னுரிமை கிடைத்திருப்பது பெருமையாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் சமீபத்திய வெற்றிகள் அனைத்தும் ஒரே செய்தியைத் தெரிவிக்கின்றன. தெற்கில் பெரும் ஆபத்து இல்லாவிட்டாலும், வடக்கே பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பும், சீனாவின் மிரட்டலும், தீவிரவாத அச்சுறுத்தல்களும் அதிகம். எனவே வடக்கே வலுவான காவல் தேசத்தின் உயிர்க் கயிறாகும். காஷ்மீரின் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றமும், பூடானில் பெற்ற வெற்றியும், ஐரோப்பா வர்த்தக ஒப்பந்தமும், ரஷ்யாவிடமிருந்து கிடைத்த நவீன பாதுகாப்பு ஆயுதங்களும், அனைத்தும் ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் எதிர்காலத்தை மேலும் பாதுகாப்பானதும் வளமானதுமான பாதையில் கொண்டு செல்கின்றன.