
டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன், உலக நாடுகளின் கவனமும் உடனே இந்தியா-ரஷ்ய கூட்டணிக்கு பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கொடுத்து வரும் வரி அழுத்தங்கள், எரிசக்தி கொள்கைத் தடைகள் ஆகியவற்றுக்கிடையே புதின் – மோடி சந்திப்பு நடக்கிறது என்பது சர்வதேச அரசியலில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யாவுடன் இந்தியா கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தடுக்க முயன்று வருகிறது. உக்ரைன் போருக்கான நிதி ஆதாரம் ரஷ்ய எண்ணெய் விற்பனை தான் என்ற குற்றச்சாட்டின் பெயரில், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முதலில் 25% வரி விதித்த ட்ரம்ப், பின்னர் அதனை 50% ஆக உயர்த்தினார்.“இந்தியா வேறு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும்; ரஷ்யாவுடன் வர்த்தகம் நிறுத்தப்பட வேண்டும்” என்று ட்ரம்ப் வெளிப்படையாக வலியுறுத்தினார்.போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது கூட, தன் கருத்துகளை அடிக்கடி மாற்றி மாற்றி வெளியிட்டு, குழப்ப நிலையை ஏற்படுத்தினார்.
இதனால், “ட்ரம்பின் உண்மையான நோக்கம் போரை நிறுத்துவதா? அல்லது இந்தியாவை பொருளாதார ரீதியாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதா?” என்ற கேள்வி உலக அரசியலில் எழுந்தது.இந்தியாவோ, அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், தன் சுயமான வெளிநாட்டு கொள்கையை தொடர்கிறது. அமெரிக்காவுடன் உறவுகளை மென்மையாக பேணிக்கொண்டே, ரஷ்யாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் இரட்டை அணுகுமுறை இந்தியாவின் தனிச்சிறப்பாக மாறியுள்ளது.
இதுகுறித்து லாவ்ரோவ் உரையாற்றியபோது,
“சுயமரியாதை மிக்க நாடான இந்தியாவை ட்ரம்ப் தொட்டு பார்க்க நினைத்தால் அவருக்கே கெட்டதாக தான்முடியும்” என்று நேரடியாக எச்சரித்தார்.இந்தியா–ரஷ்யா உறவை முறிக்க முயற்சிப்பது ட்ரம்பின் பகல் கனவாகவே இருக்கும் என்றும் சாடினார்.அதேசமயம், “இந்தியா எவருடனும் சுதந்திரமாக வர்த்தகம் செய்யும் உரிமை கொண்டது; ரஷ்யா ஒருபோதும் அதை கட்டுப்படுத்த முயலாது” என்று உறுதியளித்தார். இந்தக் கருத்துக்களால் அமெரிக்கா சற்றே சிக்கலில் சிக்கியிருக்கிறது.
வரும் டிசம்பரில் புதின் இந்தியா வருகை மிகவும் வரலாற்றுப் பின்னணியுடனானது. இந்தியா–ரஷ்யா உறவை வலுப்படுத்தும் முக்கியத் திட்டங்கள் இந்த சந்திப்பில் அறிவிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு துறை: பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுத ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள்.
தொழில்நுட்பம்: செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆராய்ச்சி, சைபர் பாதுகாப்பு துறைகளில் கூட்டணி.
சுகாதாரம்: மருத்துவ ஆராய்ச்சி, மருந்து உற்பத்தி, தடுப்பூசி தொழில்நுட்ப ஒத்துழைப்பு.
வர்த்தகம்: கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, புதிய எரிசக்தி ஆதாரங்களில் கூட்டு முதலீடுகள். இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறைவேறினால், இந்தியா–ரஷ்ய உறவு அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதிய பரிமாணத்தில் செல்லும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா விரும்பாத சூழ்நிலையிலேயே, புதின் இந்தியா வருகை நடைபெறுகிறது. ட்ரம்ப் பல அழுத்தங்களைக் கொடுத்தபோதிலும், இந்தியா தன் பாதையில் உறுதியாகச் செல்வதை இந்த வருகை வெளிப்படுத்தும். இதனால், ட்ரம்பின் திட்டங்கள் முற்றிலும் தகர்ந்து போகும் அபாயம் உருவாகியுள்ளது.அதனால் தான், உலக வட்டாரங்கள் “புதின் – மோடி சந்திப்பு, ட்ரம்பின் மண்டைக் குடைச்சலாக மாறும்” எனக் கருதுகின்றன.