புதுதில்லி : பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை நேற்று ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்திக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என காங்கிரஸ் புலம்பிவருகிறது. சோனியா மற்றும் ராகுல் ஜூன் முதல் வாரத்தில் அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் ஹெரால்டு நாளிதழ் பெயரில் பணமோசடியில் ஈடுபட்டதாக ராகுல் மற்றும் சோனியா மீது வழக்கு நடப்பது அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கில் ஜூன் 2 அன்று ராகுல் ஆஜராக வேண்டுமென்றும் ஜூன் 8 சோனியா காந்தி ஆஜராகவேண்டும் என்றும் அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது என கூறப்படுகிறது.
ஆனால் ராகுல் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் அவர் தரப்பு ஆஜராக கால அவகாசம் கோரியிருப்பதாக தெரிகிறது. ஆனால் சோனியா கண்டிப்பாக ஆஜராவார் எனவும் ஏற்கனவே அனுப்பப்பட்ட சம்மன்களை தட்டிக்கழித்ததால் இந்தமுறை கைதுவாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என்பதாலும் சோனியா உறுதியாக ஆஜராவார் என காங்கிரஸ் தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் வழக்கறிஞரான அபிஷேக் சிங்வி " பணமோசடி மற்றும் போலியான பணப்பரிவர்த்தனை என அமலாக்கத்துறை கூறியுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. வரப்போகும் சட்டமன்ற தேர்தல்களை குறிவைத்து மத்திய அரசின் அமைப்புகளை பிஜேபி பயன்படுத்துகிறது.
இது ஒரு விசித்திரமான வழக்கு. எந்தப்பணமும் சிக்காமல் எப்படி வழக்கு தொடுத்தார்கள் என புரியவில்லை. இந்த வழக்கு ஒரு வெற்றுக்காகிதம். வழக்கை நாங்கள் எதிர்கொள்வோம். பின்வாங்கமாட்டோம். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே இந்த நாடகம்" என அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் பணமோசடி மற்றும் முறையற்ற பணபரிவர்த்தனை வழக்கில் ராகுல் மற்றும் சோனியா ஜாமீனில் இருப்பதாகவும் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.