தமிழகத்தில் 2024-மக்களவை தேர்தலில் மீண்டும் பெரிய வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்றால் அதற்கு வலுவான கூட்டணி முக்கியம் என திமுக தலைமை முடிவு எடுத்து இருக்கிறதாம்.. ஆளும் கட்சி மீதான அதிருப்தியை சந்திக்க பாமகவை நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணியில் சேர்த்து தொகுதி ஒதுக்கீடு செய்ய திமுக தலைமை பச்சை கொடி காட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
"தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவினர் சந்தித்து பேசினர், இதன் பிறகு வெளியே வந்த அன்புமணி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் நல்ல மூத்த வழக்கறிஞர்கள் நல்லபடியாக வாதிட்டார்கள். நல்ல முறையில்தான் தமிழக அரசு சட்டப் பிரச்சினையை கையாண்டு இருக்கிறது" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி நற்சான்று கொடுத்தார்.
" 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையிலான கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்."
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "தமிழக முதல்வர் உடனான சந்திப்பின்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மிக தெளிவாக, தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கலாம். எந்த தடையும் இல்லை.
"புள்ளி விவரங்களை சேகரித்து சட்டப்பேரவையில் சட்டத்தைக் கொண்டுவந்து மீண்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்" என்று முதல்வரைக் கேட்டுக் கொண்டோம். முதல்வர் நிச்சயமாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து நல்ல சாதகமான நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கிறார்.
தமிழக அரசு சார்பில் நல்ல மூத்த வழக்கறிஞர்களை வைத்துதான் வாதிட்டார்கள், அபிஷேக் மனுசிங்வி, முகுல் ரோஹ்தகி, ராகேஷ் திவேதி, உச்ச நீதிமன்றம் என்றாலே நல்ல மூத்த வழக்கறிஞர்கள் என்றால் இவர்கள்தான், நல்லபடியாக வாதிட்டார்கள்.
நல்ல முறையில்தான் தமிழக அரசு இந்த சட்டப் பிரச்சினையை கையாண்டு இருக்கிறது என பாமக திமுகவிற்கு நற் சான்றிதழ் கொடுத்துள்ளது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசு முறையாக வாதட தவறிவிட்டதாக குற்றசாட்டு கூறிய நிலையில் அதனை மறுக்கும் விதமாக அன்புமணி பேட்டி கொடுத்தார்.
இந்த சூழலில் வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பாமாகவை கூட்டணியில் சேர்க்க திமுக முடிவு செய்து இருப்பதாகவும், இதில் பாமாவிற்கு புதுச்சேரி மக்களவை தொகுதியும் தமிழகத்தில் 5 இடங்களும் ஒதுக்க இப்போதே மூத்த திமுக அமைச்சர் ஒருவர் மூலம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தனித்து நின்றால் வெற்றி பெறுவது சிரமம் என பாமக கருதுவதால் அந்த கட்சியும் திமுகவின் ஆப்பரை ஏற்று கொள்ளும் என கூறப்படுகிறது, இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாமக பாஜக இரண்டும் எங்கள் கொள்கை எதிரி இந்த இரு கட்சிகளும் இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என திருமாவளவன் முன்பே தெரிவித்து இருக்கிறார்.
அப்படி இருக்கையில் திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக எது போன்ற முடிவை எடுக்கும் கூட்டணியில் இருந்து வெளியேறுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. மொத்தத்தில் திமுகவின் கணக்கு அக்கட்சிக்கு வளர்ச்சியை கொடுத்தாலும் விசிகவிற்கு இடியாப்ப சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.