
தமிழகத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ. 1,000 கோடியை மறைக்க, மதுபான ஆலைகள் திட்டமிட்ட முறையில் செலவுகளை உயர்த்தி, போலியான கொள்முதல்களை, குறிப்பாக பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் போலியான கொள்முதல் செய்திருக்கின்றன. அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலமாதங்களுக்கு முன்னர் எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ் என்ற மதுபான நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தியது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் தலைமையகம் மற்றும் அதன் நிர்வாக இயுக்குனர் வீடு உட்பட பல முக்கிய இடங்களில் சோதனைகள் நடந்தன.தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் தற்போது ஒரு புது ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திர மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக, தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்து, 11 கோடி ரூபாயை சிறப்பு புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - பா.ஜ.க - ஜனசேனா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு, 2019 - 24 வரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தது.அப்போது, மதுபான விற்பனையில், 3,500 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. புதிய ஆட்சி அமைந்ததும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ஆந்திர சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை தனியாக விசாரித்து வருகிறது.இந்த வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாதந்தோறும் 60 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.
மதுபான ஊழல் வழக்கில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தனஞ்செயன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில், ஜெகன் கட்சியைச் சேர்ந்த வருண் புருஷோத்தமன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில், தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பண்ணை வீட்டில், சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு, கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாயை அவர்கள் பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், 'வருண் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த விவகாரத்தில், தொடர்புடைய உயர் மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களையும் அவர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியைச் சேர்ந்த மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவர்' என, தெரிவித்தனர்.
தற்போது இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் டாஸ்மாக் முறைகேடும் ஆந்திர மதுபான ஊழலும் ஒரே மாதிரியாக இருப்பதால் அமலாக்கத்துறை வேகத்தை அதிகரித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது எங்கிருந்து வந்தது என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கும் தமிழகத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பதை துருவ ஆரம்பித்துளார்கள். இது மீண்டும் கோபாலபுரத்துக்கு சிக்கல் வரும் என டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளது.