24 special

பாவம் என்று மோடியாக விட்டு கொடுத்தால் மட்டுமே உண்டு...! எதிர்க்கட்சிகளுக்கு வழியே இல்லை!

Modi, nitish kumar
Modi, nitish kumar

மத்திய அரசை எதிர்க்க புதிதாக ஒரு தலைவர் கிளம்பினால் நாடெங்கும் உள்ள எதிர்க்கட்சிகள் அமோகமாக கொண்டாடுகின்றன. டி.வி.சானல்கள் உற்சாகமாக விவாதிக்கின்றன.


நிதீஷ்குமார் பாஜகவுக்கு எதிராக மீண்டும் திரும்பி விட்டதால் பீகாரில் அக்கட்சிக்கு எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள்.மோடி அவ்வளவுதான் என்ற எதிர்க்கட்சிகளின் எண்ணம் சிறு பிள்ளைத் தனமானது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் எதிர் தரப்பு வேட்பாளர்கள் பெற்றுள்ள பெரும் தோல்வி , எதிர்க்கட்சிகளின் பலவீனமான நிலையையும் ஒற்றுமையின்மையையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இன்னும் அரை டஜன் நிதீஷ் குமார்கள் தோன்றினாலும் அதை ஈடு செய்ய வழியில்லை. சொல்லப்போனால், பீஹாரில் நிதீஷ்குமார் மீது அதிருப்தியும் பாஜக மீது அனுதாபமும் தோன்றவே வாய்ப்பு அதிகம் உள்ளது. 

குறைந்த அளவு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்ற நிதீஷ் குமார் முதல்வராக அனுமதித்ததை எப்படியாவது  பாஜக தவிர்த்திருக்க வேண்டும். மகாராஷ்டிராவில் ஷிண்டேவை முதல்வராக்கியதற்கும்,  பின்னர் பாஜக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. அடுத்த முறை நிதீஷ்குமார் மீண்டும் பாஜக பக்கம் வருவார். அப்போதாவது அவரை ஏற்காதிருக்கும் மன உறுதி பாஜகவுக்கு வர வேண்டும்.

அது இருக்கட்டும். எதிர்க்கட்சிகளின் இப்போதைய மகிழ்ச்சி தொடருமா என்பது பெரிய கேள்விக்குறி.  எத்தனை தலைவர்கள் முட்டு கொடுத்தாலும் மோடிக்கு மாற்றாக ஒரு தேசியத்தலைவரை உருவாக்குவது இப்போதைக்கு சாத்தியமற்றது. எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது நடக்கக் கூடியதும் அல்ல. மம்தாவும் கம்யூனிஸ்டுகளும் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் , ராகுலும் சந்திர சேகர ராவும் ஒரு நேர் கோட்டில் இணையக் கூடியவர்கள் அல்ல. 

மோடி,  எதிர்க்கட்சிகளின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறாரே தவிர, மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கவில்லை. மோடியாகப் பார்த்து விட்டுக் கொடுத்தால் அன்றி, அவரை பிரதமர் பதவியிலிருந்து இறக்க எதிர்க்கட்சிகளால் முடியும் என்று தோன்றவில்லை. மாநிலங்களில் அவரவர் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது. அத்துடன், ஒரு உருப்படியான எதிர்கட்சித் தலைவரை உருவாக்கவும் பாடுபட வேண்டும்.

 துக்ளக் சத்யா