24 special

மாநிலத்தில் ஓங்கும் பி.எல் சந்தோஷின் கை..! 2023 தேர்தல் முன்னோட்டம்..!

PL santhosh
PL santhosh

கர்நாடகா : கர்நாடக அரசியலில் குறிப்பாக பிஜேபியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவருகிறார் பி.எல் சந்தோஷ். 2018 வரை பிஜேபியின் அமைப்பு பொறுப்பாளராக இருந்தவர் 2018 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய அளவில் உயர்த்தப்பட்டு படிப்படியாக தன்னை நிலைநிறுத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும் இவருக்குமான பனிபோர் தற்போதுவரை நீடித்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


2018 தேர்தல் வெற்றிக்கு பிறகு பிஜேபி தேசிய அமைப்பு பொதுச்செயலாளராக இருக்கும் பி.எஸ் எடியூரப்பா ஆதரவாளர்களின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து சந்தோஷின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது அரசியல் விமர்சகர்களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. கட்சி தலைமையகமான ஜெகநாத் பவனில் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதிலிருந்து 2019 முதல் நடைபெற்று வரும் தேர்தல்கள் வரை சந்தோஷின் ஆதிக்கம் வியாபித்துள்ளது.

அடுத்தடுத்த சந்தோஷின் முன்னேற்றங்கள் 2023ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சந்தோஷின் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் 2018ல் தொடங்கியது என கூறப்பட்டாலும்  2019ல் மாநில பிஜேபி தலைவராக இரண்டாவது முறை நளின்குமாரின் நியமனம் மாநிலத்தின் அதிகார புள்ளிகள் பி.எல்.சந்தோஷின் வசம் செல்ல ஆரம்பித்தது. 

அடுத்தடுத்து கட்சி தலைமை எடுத்த முடிவுகள் அனைத்திலும் சந்தோஷின் செல்வாக்கு இருந்தது. மேலும் பசவராஜ் பொம்மையை முதல்வராக தேர்ந்தெடுப்பதில் சந்தோஷின் பங்கு அளப்பரியது என கூறப்படுகிறது.  அதேபோல அதிக பரிச்சயமில்லாத கட்சி தொண்டர்களை சந்தோஷ் முன்னிலைப்படுத்தி வருகிறார். ஒரு எம்.எல்.ஏ மற்றும் ராஜ்யசபா வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைத்தார்.

அதில் எரண்ணா கடாடி, அசோக் காஸ்ட்டி போன்ற காரியகர்த்தாக்களை முன்னிலைப்படுத்தி கட்சி தொண்டர்களிடையேயும் காரியகர்த்தாக்களிடையேவும் தனிமதிப்பை பெற்றார்.இவரது செயல் காரியகர்த்தாக்களை ஊக்கப்படுத்தியதோடு அவர்களை இன்னும் களப்பணியாற்ற மெருகேற்றியுள்ளது. இன்றைய கர்நாடக அரசியல் நிலவரப்படி பி.எல் சந்தோஷ் கைகாட்டுபவரே முதல்வர் வேட்பாளர் எனும் நிலை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பிஜேபிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை பாண்டிசேரி மற்றும் கர்நாடகாவில் மட்டுமே பிஜேபி தனது முத்திரையை பதித்துள்ளது. தெலுங்கானா தமிழகம் ஆந்திரா எப்போதுமே ஒரு சவாலாக இருக்கும் நிலையில் கர்நாடகாவை தக்கவைப்பது பிஜேபிக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.