அஸ்ஸாம் : பிரபல ஆன்லைன் செய்திநிறுவனமான டைம் 8 அஸ்ஸாமை தலைமையிடமாக கொண்டு இயங்கிவருகிறது. இதன் சமூக வலைதள கணக்குகளில் 7 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இந்த சேனலுக்கு யூ ட்யூப்பும் தனியாக உண்டு. இந்த யூ ட்யூப்பை பாகிஸ்தானை சேர்ந்தஒரு குழு ஹேக் செய்ததாக கூறப்படுகிறது.
டைம் 8 யூ ட்யூப் சேனலின் சராசரி பார்வையாளர்கள் 600 மில்லயனுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூன் 9 அன்று நேரலை செய்திகள் வாசிக்கப்பட இருந்த நிலையில் திடீரென தகவல் பரிமாற்றம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனர் உத்பல் கூறுகையில் " ரெவல்யூசன் பிகே எனும் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர் குழு நேரலையின்போதே எங்கள் சேனலை ஹேக் செய்தது.
ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை மாற்றி யூ ட்யூப் சேனலை ஹேக் செய்து பாகிஸ்தான் கொடியை நேரலையில் ஒளிபரப்பியதோடு நபிகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என கூறி நபிகள் பற்றிய பாடலை ஒளிபரப்பியது. இதுகுறித்த கடும் கண்டனங்களை தெரிவிக்கிறோம். தேச பாதுகாப்பு தொடர்பான இந்த சம்பவத்தில் நாங்கள் கவலையை தெரிவிக்கிறோம்" என உத்பல் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் ஹேக்கர்கள் இதை சமூக வலைத்தளங்களில் வைரலாகினர். பாகிஸ்தானை சேர்ந்த பலர் இதற்கு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் டைம் 8 நிர்வாகிகள் தங்களது தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளை எச்சரித்துள்ளனர். இதுகுறித்து கவுகாத்தி கமிஷனர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கவுகாத்தி போலீசார் " எங்கள் சைபர் க்ரைம் போலீசார் இதுதொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்துவருகின்றனர். அடையாளம் தெரியாத முகம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தேசத்தின் பாதுகாப்பு பற்றியது என்பதால் தேவைப்படும் பட்சத்தில் மத்திய புலனாய்வுத்துறை அமைப்புகளை அணுகுவோம்" என தெரிவித்துள்ளனர்.