
டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெறவுள்ள இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டை முன்னிட்டு, உலக அரசியல், பொருளாதாரம், சந்தை மாற்றங்கள் என பல துறைகளிலும் கவனம் கூடியுள்ளது. அமெரிக்கா இந்தியா மீது புதிய வரிகள் விதிக்குமா, பங்குச் சந்தை எந்த திசையில் செல்லும், தங்கம்–வெள்ளியின் விலை எப்படி மாறும் போன்ற கேள்விகள் மட்டுமல்லாமல், இந்தியா–ரஷ்யா உறவு எந்த நிலைக்கு செல்வது என்பதையும் உலக நாடுகள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன.
பல ஆண்டுகளாக நெருக்கமான கூட்டுறவு கொண்ட இரு நாடுகளும், அனைத்து சூழலிலும் தங்கள் உறவைத் தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டே வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவுடனான வர்த்தகம், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்தியா மீது அழுத்தம் அதிகரித்து வருவதாக வட்டாரங்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யா–உக்ரைன் போருக்கு பிந்தைய காலத்தில் இதுவே முதல் முறை இந்தியா வருகிறார் என்பதும் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடின் மீது வெளியிட்ட உத்தரவு காரணமாக, பல நாடுகளில் அவர் கைது செய்யப்படக்கூடிய நிலை இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு அவர் வருகை தருவது உலக செய்தியாக மாறியுள்ளது. இந்த பயணம் எந்த நோக்கத்திற்காக, எந்த துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று பல நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன.
இந்தியா–ரஷ்யா உறவில் பாரம்பரியமாக பாதுகாப்பு, அணுசக்தி, ஹைட்ரோகார்பன், விண்வெளி, தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகிய துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பு உள்ளது. இதே துறைகளில் இந்த முறைவும் முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என இரு தரப்பும் எதிர்பார்த்துள்ளன.
ஸ்டாக்ஹோம் அமைதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட தகவலின்படி, 2000–2010 காலகட்டத்தில் இந்தியா இறக்குமதி செய்த முக்கிய இராணுவ உபகரணங்களில் 70% ரஷ்யாவிலிருந்து வந்தன. 2002 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 89% வரை உயர்ந்தது. அணு ஆயுத நாடாக இந்தியா வளர்ந்த காலத்தில், பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், ரஷ்யா மட்டுமே இந்தியாவின் பக்கத்தில் நிலையாக இருந்தது என்ற வரலாற்று காரணம் இதற்கு அடிப்படை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் அண்மைக் காலங்களில் இந்த சதவீதம் படிப்படியாக குறைந்து வருகிறது. 2012 இல் 87% இருந்த இறக்குமதி விகிதம், 2014 இல் 41% ஆகவும், 2019–2023 இடையே 36% ஆகவும் குறைந்துள்ளது. இது ரஷ்யாவுடன் உள்ள உறவு பாதிக்கப்பட்டதனால் அல்ல; இந்தியாவின் தற்சார்பு பாரதம் இந்தியா அதுமட்டுமில்லாமல் காலத்திற்கேற்றவாறு நவீன தொழிநுட்பம் அடங்கிய ஆயுதங்களை கொள்முதல் செய்வதால் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஆயுதங்கள் வாங்கத் தொடங்கியது என்பதே காரணம்.
மேலும், ’மேக் இன் இந்தியா’ கொள்கையின் கீழ் பல முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவே உற்பத்தி செய்யும் நிலை உருவாகி வருகிறது. அதனால் ரஷ்யாவின் பங்கு குறைந்தாலும், இரு நாடுகளிற்கும் இடையிலான மூலப்பூர்வமான உறவு மற்றும் ஒத்துழைப்பு நிலைத்திருக்கிறது.இந்த பின்னணியில்தான் டிசம்பர் 4-5 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் புதிய பாதுகாப்பு புரிந்துணர்வுகள், எரிசக்தி ஒப்பந்தங்கள், விண்வெளி ஒத்துழைப்பில் முன்னேற்றங்கள், வர்த்தக அதிகரிப்பு போன்றவை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.உலக அரசியல் அசாதாரணமாக மாறிக்கொண்டிருக்கிற நேரத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு, இந்தியா–ரஷ்யா உறவுக்கு அடுத்த கட்டத்தைக் குறிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
