திமுகவின் செயல்பாடும் பாஜகவின் செயல்பாடும் காங்கிரஸ் நிலைமையும் வைத்து பார்க்கும்போது காங்கிரசை விட்டு விலகி பாஜகவை, திமுக நெருங்குகிறதா என்ற சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டு இருக்கின்றது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடியும் நிலையில், அடுத்து யார் குடியரசு தலைவர் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்து இருக்கின்றது. குடியரசு தலைவர் தேர்தல் எம்எல்ஏ மற்றும் எம்பிக்களின் வாக்காளர் குழும வாக்கு அடிப்படையில் நடைபெறுவதால் 9,194 வாக்குகள் பாஜகவுக்கு தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதற்காக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜகவுக்கு எதிராக இருக்கின்றார்.அதே போல் ஒடிசாவில் நவீன் பட்நாயக் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இப்படியான நிலையில் இக்கட்சிகளுக்கு மாற்றாக திமுகவின் ஆதரவை பெற பாஜக முயற்சி செய்ய வாய்ப்பு இருக்கிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்தால், சமீபத்தில் ராகுல் காந்தி ஒரு விஷயத்தை சொல்லி இருந்தார்.அதாவது "வெறுப்பு வன்முறை கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது; காங்கிரஸ் போல மற்ற மாநில கட்சிகள் பாஜகவுக்கு எதிராக போராட முடியாது என தெரிவித்து இருந்தார். இதற்கு மதசார்பற்ற ஜனதா கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளிட்ட சில கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை. அப்போதே திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே ஒரு விதமான முணுமுணுப்பு ஏற்பட்டது.
இப்படியான நிலைமையில் வரும் 28ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி யின் சிலையை ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை வைத்து திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடுவை முன் நிறுத்தப்படலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் தற்போது வெங்கைய நாயுடு ஊட்டியில் ஓய்வு எடுத்து வருகிறார். அதேவேளையில் மலர் கண்காட்சியை திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் ஊட்டி சென்று இருக்கின்றார்.
அங்கு இவர்கள் இருவரும் சந்திக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என பேசப்படுகிறது. மற்றொரு சம்பவத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையை திமுக கொண்டாடி வருகிறது.காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதை கூட பெரிய அளவில் பொருட்படுத்தாமல் பேரறிவாளனை பெரிய தியாகி போல போற்றி புகழ்வது பார்க்க முடிகிறது. இதனால் காங்கிரஸ் மிகுந்த வேதனையில் இருக்கிறது.
குறிப்பாக காங்கிரஸின் உண்மையான தொண்டர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றார்களாம். 7 பேரின் விடுதலைக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த காங்கிரஸ் தற்போது தங்களுடைய கண்டனத்தையும் தெரிவித்திருக்கின்றது. மேலும் பேரறிவாளன் விடுதலை திமுக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் பதிவு செய்திருக்கின்றார். மேலும் மற்ற ஆறு பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இத்தகைய நிகழ்வுகள் மற்றும் அரசியல் கட்சிகளை நகர்வுகளும் காங்கிரசை விட்டு விலகி பாஜகவை நோக்கி திமுக நெருங்கி செல்கிறதோ என்ற பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கிடையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக வேட்பாளர்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் எங்களது ஆதரவு இருக்கும் என குறிப்பிட்டு பேசியிருந்தார். எனவே எதிர்கால அரசியல் என்பது ஒவ்வொரு நகர்வையும் தேவைக்கு ஏற்ப சில மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.