
இந்தியாவின் பாதுகாப்புத் துறை தற்போது புதிய ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. நாட்டின் வான் பாதுகாப்பு வலிமையை மேலும் பலப்படுத்தும் முயற்சியாக, ரஷ்யாவிடமிருந்து சுமார் ரூ.10,000 கோடி மதிப்புள்ள எஸ்–400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இந்திய விமானப்படையின் பாதுகாப்புத் திறன் உலக அளவில் மிகுந்த மேம்பாட்டை அடையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட பதட்டத்தின் போது, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை உலக கவனத்தை ஈர்த்தது.அப்போது இந்தியா பயன்படுத்திய எஸ்–400 வான் பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்களை 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் வீழ்த்தியுள்ளது.இது இந்திய வான்படையின் ஆற்றலை வெளிப்படுத்திய ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. அந்த நடவடிக்கைக்குப் பிறகு, எஸ்–400 அமைப்புகள் “கேம் சேஞ்சர்” என உலக அளவில் பாராட்டப்பட்டன.இதனால், இந்தியா இந்த அமைப்புகளை மேலும் விரிவுபடுத்தவும், புதுப்பிக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்திய விமானப்படையில் தற்போது செயல்பட்டு வரும் எஸ்–400 பாதுகாப்பு அமைப்புகளை மாற்றி, புதிய மற்றும் மேம்பட்ட எஸ்–400 ஏவுகணை அமைப்புகளை சேர்க்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த திட்டத்திற்கான முன்மொழிவு விரைவில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council) கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஒப்புதல் கிடைத்ததும், ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் இந்தியா ரஷ்யாவுடன் ஐந்து எஸ்–400 ஸ்குவாட்ரான்களை வாங்க ஒப்பந்தம் செய்தது.அதில் மூன்றை இந்தியா ஏற்கனவே பெற்றுவிட்டது. ஆனால், உக்கிரைன்–ரஷ்யா போர் காரணமாக மீதமுள்ள இரண்டு ஸ்குவாட்ரான்களை வழங்குவது தாமதமானது. தற்போது அதனை விரைவுபடுத்த ரஷ்யாவுடன் இந்தியா தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எஸ்–400 அமைப்புகளை விட இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட எஸ்–500 வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றியும் இரு நாடுகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. மேலும், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய பிரமோஸ் ஏவுகணைகளின் திறனை அதிகரிக்கும் புதிய திட்டங்களும் உருவாகி வருகின்றன. இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளின் நீண்டநாள் ராணுவ நட்பின் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வரும் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த சந்திப்பின் போது, ராணுவ ஒத்துழைப்பு, ஆற்றல் வணிகம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்தும் இரு நாடுகள் விரிவாக ஆலோசிக்க உள்ளன.இந்த வருகையின் போது புதிய எஸ்–400 ஒப்பந்தமும் கையெழுத்தாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தடைகள் மற்றும் வரி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.உக்கிரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா பல நாடுகளிடம், ரஷ்யாவுடன் வணிக உறவுகளை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.இந்த நிலையில், இந்தியா ரஷ்யாவுடன் பெரிய ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வது அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கும்.
அமெரிக்கா இந்தியாவுக்கு கூடுதல் வரி அல்லது பொருளாதார தடைகள் விதிக்கலாம் என சில புவிசார் அரசியல் நிபுணர்களிடையே எழுந்துள்ளது.ஆனால், இந்தியா எந்த வெளிநாட்டு அழுத்தத்திற்கும் தலை வணங்காது, தன் தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் நாடாக இருப்பதை பலமுறை நிரூபித்துள்ளது.