24 special

சுயமோட்டோ வழக்கு..! அரசை கண்டித்த நீதிமன்றம்..!

Maharashtra court
Maharashtra court

மஹராஷ்டிரா : சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் மற்றும் ஜோதிபா பூலே அவர்களின் அசல் கையெழுத்து அடங்கிய பிரதிகளை பாதுகாக்க என்னமாதிரியான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது என நேற்று உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.


சட்டமேதை அம்பேத்கார் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ஜோதிபா பூலே ஆகியோரின் இலக்கியங்களை வெளியிடப்பபோவதாக மஹாராஷ்டிரா அரசு அறிவித்திருந்தது. ஆனால் அந்த திட்டத்தை நிறுத்திவிட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதைத்தொடர்ந்து 2021ல் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிபி.வரலே மற்றும் டி.எஸ் குல்கர்னி கொண்ட டிவிஷன் பெஞ்ச் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது.

இந்நிலையில் நேற்று நீதிமன்றத்திற்கு உதவும் நோக்கத்தில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ் ஜாதவ் இந்த வழக்கில் ஆஜராகி பெஞ்ச் சார்பாக வாதாடினார். அவர் வாதாடுகையில் " டாக்டர் அம்பேத்கார்  மற்றும் ஜோதிபா புலேவின் அசல் கையெழுத்துப்பிரதிகள் தெற்கு மும்பையில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் அதிக வெளிச்சம் காற்றோட்டம் இல்லாத இடத்தில் வைத்து அரசு பராமரிக்கிறது.

பருவமழை தொடங்கினால் அந்த காகிதங்கள் நனைவதற்கும் கெட்டுபோவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் அரிய பொக்கிஷமாக கருதப்படும் அந்த பிரதிகள் அழிந்துபோக வாய்ப்புகள் அதிகம். இதனால் மீளமுடியாத சேதங்கள் ஏற்படும்" என அவர் வாதாடினார். மாநில அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பூர்ணிமா காந்தாரியா கூறுகையில்,

" இதுதொடர்பாக அரசு தரப்பு விரைவில் பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்யும்" என கூறினார். அதை இடைமறித்த நீதிபதிகள் அந்த பிரதிகளை பாதுகாக்க அரசாங்கம் என்னென்ன நடவடிக்கை எடுத்துவருகிறது என்பதை அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும் அடுத்த நான்குவாரங்களுக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.