எந்த நேரத்தில் எங்களை சீண்டி பார்க்காதே உரசி பார்க்காதே என முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைது செய்த போது மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்தாரோ அன்றில் இருந்து இன்று வரை திமுகவின் பல முக்கிய புள்ளிகள் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு அலையும் நிலை உண்டாகி இருக்கிறது.
இந்த நிலையில் தென் தமிழகத்தில் திமுகவின் அசைக்க முடியாத சக்தி என அறியப்படும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கதுறை உள்ளே வந்து தங்களிடம் அனைத்தும் இருப்பதாக நீதி மன்றத்தில் கூறியது கடும் அதிர்ச்சியை திமுகவிற்கு கொடுத்து இருக்கிறது.
திமுகவை சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இதுதொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூபாய் 6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை,
தமிழக அமைச்சராக அனிதாகிருஷ்ணன் இருப்பதால் அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் இருந்து வெளியே செல்ல வாய்ப்பு இருக்கிறது, சிட்டிங் அமைச்சருக்கு எதிராக எப்படி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை செயல்படும் எனவே தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் தங்களையும் இணைக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி செல்வம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ”அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் உள்ளது. அவர் தொடர்ந்து அமைச்சரவையில் இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை” என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் ஆணித்தரமாகதெரிவித்தார்.இப்படி காரசார வாதம் போய் கொண்டு இருக்க ’அமலாக்கத்துறையின் மனுவை ஏற்றுக்கொள்ள கூடாது ’ என லஞ்ச ஒழிப்புத் துறையினரும், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரனும் வாதிட்டனர்.
அனிதா ராதா கிருஷ்ணன் தரப்பும் லஞ்ச ஒழிப்பு துறையும் ஒரே போன்று அமலாக்க துறை உள்ளே வர கூடாது என நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களில் இருந்தே எந்த அளவு அமைச்சர் ராதா கிருஷ்ணன் தரப்பு மிரண்டு போயிருப்பது தெரியவந்து இருக்கிறது.தொடர்ந்து சுமார் 50 நிமிடம் நடைபெற்ற விவாதங்கள் நிறைவு பெறாததை தொடர்ந்து வரும் நவம்பர் 01 தேதிக்கு விசாரணையை முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் ஊழல் வழக்குகளில் சிக்கிய செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன், அனிதா ராதாகிருஷ்ணன் என பலருக்கு எதிராக ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று தர அமலாக்கதுறை எனும் அசுரன் களம் இறங்கி இருப்பதும் முழு வீச்சுடன் தயாராகி இருப்பதும் பெரும் பல அமைச்சர்களையும் குறிப்பாக திமுக தலைமையையும் திகைத்து போக செய்து இருக்கிறது.